யார் கொன்றார்கள்? சுரேஸ் அவர்களே கொன்றார்கள்! சவேந்திர சில்வா


காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தனது கருத்தில் சில விடையங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஒன்று தாம் எந்த இராணுவ முகாம்களையும் வடக்கில் இருந்து அகற்ற மாட்டோம் என்பதாகும். தொடர்ச்சியாக இங்குள்ள மக்களுடைய காணிகள் முப்படையினருடைய வசம் இருக்கின்றது. இவர்கள் தங்களுடைய இருப்பை குறைத்தால் மாத்திரம் தான் காணிகளை விடுவிக்க முடியுமென்ற சூழல் இருக்கின்றது.

யுத்தம்நிறைவுற்று பத்து வருடம் முடிந்து விட்ட பின்பு வடக்கு மாகாணத்தில் எந்த விதமான தேசிய பாதுகாப்புக்கான குந்தகமான சூழ்நிலையும் ஏற்படவில்லை. தென்மாகாணங்களில் மிக மோசமாக துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன, பாதாளக்குழு செயற்பாடுகள் மிக தாராளமாக இடம்பெறுகின்றது. காலி கடலிலும், கொழும்பு கடலிலும் கிலோ கணக்கான போதைவஸ்துகள் கடத்தப்பட்டு வருகின்றது.

ஆகவே இராணுவத்தினர் குவிக்கப்பட எ வேண்டிய இடமாக கொழும்பும், காலியும், மாத்தறையும் மற்றும் அம்பாந்தோட்டை போன்ற இடங்கள் இருக்கின்றது. அப்படியிருந்தும் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினரை குவித்து வைத்திருப்பது என்பது தமிழ் மக்களை தொடர்ச்சியாக அடக்கு முறைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அவர்களுடைய சிந்தனையின் வெளிப்பாடே.

யார் என்ன சொன்னாலும் நாங்கள் வடக்கை விட்டு இராணுவத்தினரை அகற்ற மாட்டோம் என்று சவேந்திர கூறுவது ஏற்புடையது இல்லை. தேவைக்கு மேலதிகமான இராணுவத்தினரை குறைத்து அதனூடாக தமிழ் மக்களுக்கு காத்திரமான ஜனநாயக சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம். மாறாக இவர்கள் என்ன காரணத்திற்காக தமிழ் மக்களை தொடர்ந்தும் இராணுவ அடிமைத் தனத்துக்குள் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றனர்.

வடக்கில் வாள் வெட்டு என சிறிய சிறிய விடயங்கள் நடக்கிறதே தவிர இது ஒரு அமைதியான பிரதேசமாக இருக்கின்றது. பொலிஸார் மனம் வைத்தால் இந்த வாள்வெட்டு கும்பலை இல்லாது செய்ய முடியும். அதே போல கஞ்சா கடத்தல் போன்ற விடயங்களை நிறுத்த முடியும்.

இதற்கெல்லாம் இராணுவமயமாக்கப்பட வேண்டும் என்ற தேவைகள் நிச்சயமாக இல்லை என்பதை சவேந்திர சில்வாவுக்கு நாங்கள் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். ஆகவே இந்த நிலைமைகள் வடக்கு மாகாணத்தில் மாற்றமடைய வேண்டும் அல்லாதுவிட்டால் இவர்கள் தாங்களாகவே தமிழ் மக்களை ஜனநாயக போராட்டமோ – வேறெந்த போராட்டமோ அவற்றின்பால் தள்ளக்கூடாது.

ஜே.ஆ.ஜெயவர்த்தன ஆட்சியிலும் அடக்குமுறைகள்தான் மக்களை போராட்ட களங்களுக்கு தள்ளியது என்பதை தயவு செய்து இந்த இராணுவ உயர் அதிகாரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். அந்தவகையில் இப்போது இவர்கள் எடுத்திருக்கக் கூடிய முடிவுகள் என்பது ஏற்புடைய முடிவுகளாக தெரியவில்லை.

அதேபோலதான் சவேந்திர சில்வா இன்னுமொரு விடையத்தையும் கூறி இருக்கின்றார். அதாவது காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருப்பார்களோ அல்லது இறந்துபோய் இருப்பார்கள் என அவர் கூறுகின்றார். ஒரு விடையத்தை இராணுவத் தளபதி மறந்துவிட்டார். அதாவது சரனடைந்தவர்கள், பொது மக்களுக்கு முன்னால் சரனடைந்தவர்கள், தமது பெற்றோர்களால் கையளிக்கப்பட்டவர்கள். இவர்கள் இறந்து போனார்கள் என்றால் எவ்வாறு இறந்து போனார்கள் என்பதை சவேந்திர சில்வா வெளிப்படுத்த வேண்டும்.

அவர்கள் இறந்து போனதுக்கான காரணம் என்ன சரனடைந்தவர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களும் இறந்து போய்ட்டார்கள் என்று கூறினால் எவ்வாவாறு இறந்து போனார்கள் கொலை செய்யப் பட்டார்களா? யாரால் கொல்லப்பட்டார்கள்? அல்லது நூற்றுக்கணக்கா, ஆயிரக்கணக்கா அவர்கள் இறந்திருப்பதாக எந்தவித காரணங்களும் நிச்சயமாக கிடையாது.

ஆகவே ஒரு இராணுவ தாக்குதலின் போது, இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டதுக்கு அப்பால் அரசாங்கத்திடம் சரணடைந்தவர்கள், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று கூறினால் அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும்.

அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படையாக சொல்லவேண்டும். அவ்வாறு சொல்ல தகுதியற்ற அரசாங்கமாக அது இருக்குமாயின் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை தமிழ் மக்கள் மீது ஏவி விடுகிறதென்பது அப்பட்டமான வெளிப்படையான ஒரு விடையமாக இருக்கும்.

ஆகவே இராணுவத் தளபதி சொன்னது உண்மையாக இருந்தால் அரசாங்கம் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது சொல்லப்படவேண்டு. இல்லை என்றால் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டு அந்த விசாரணைக்கு அவர்கள் தங்களை தாங்களே உட்படுத்த வேண்டும். இவ்வாறான விடையங்கள் நடந்தால் மாத்திரம்தான் தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச நீதியாவது கிடைக்குமென நான் கருதுகின்றேன்.’ – என்றார்.
இதனிடையே  விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை அந்த அமைப்பினரே கொன்று உடலை மறைத்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்கள் அப்படி காணாமல் போயிருக்கலாம். அல்லது யுத்தத்தில் இறந்திருக்கலாம். சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இராணுவ செயற்பாடுகள், வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் காணப்படும் இராணுவ ஆதிக்கம் மற்றும் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இவற்றை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமே இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பொற்காலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த காலங்களை விடவும் இப்போது நாட்டில் இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது.

எனினும் நாடு இராணுவ மயமாவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டே வருகின்றது. ஓய்வுபெற்ற தகுதியான அதிகாரிகள் தமது திறமையை சிவில் சேவைகளில் வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது.

இராணுவத்தை அதிகமாக பயன்படுத்தி நாட்டின் சேவையை பெற்றுக்கொள்வது இராணுவ மயமாதல் அல்ல. தேவைக்கேற்ப இராணுவத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி நினைகின்றார்.

மாறாக இந்த நாட்டை இராணுவ மயமாக்க வேண்டும் என்ற தேவையொன்று இல்லை. இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவில்லை. ஜனாதிபதியும் இராணுவத்தை ஆட்சிக்கு கொண்டுவர நினைக்கவும் மாட்டார்.

மேலும் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. இருக்கும் முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமே தவிர இருக்கின்ற முகாம்களை அகற்ற எமக்கு எந்த நோக்கமும் இல்லை. வடக்கில் முகாம்களில் இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது என்பதற்காக மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்ற அர்த்தமில்லை. அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவருமே இல்லை. யுத்த காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளோம்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலரை புலிகளே கொன்றனர். கொன்று அவர்களின் உடல்களை மறைத்தனர். அவ்வாறு மறைத்த உடல்களை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும்.

காணாமல் போனவர்கள் என கூறும் நபர்கள் அந்த பட்டியலில் இருக்கலாம். அதேபோல் யுத்தத்தில் எமக்கு எதிராக போராடியவர்கள் கொல்லப்பட்டனர், ஏனையோர் சரணடைந்தனர்.

சரணடைந்த நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் காணாமால் ஆக்கப்பட்டதாக கூறப்படும் அல்லது தேடப்படும் நபர்கள் இல்லை என்றால் அந்த நபர்கள் இறந்திருக்க வேண்டும். யுத்தத்தில் இறந்தவர்களில் எமக்கு கிடைத்த சடலங்களை நாம் ஒப்படைத்துள்ளோம். செஞ்சிலுவை சங்கம் ஊடாக அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments