கொழும்பு கோட்டை விட்ட கதை?

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனைகளில் பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளதாக
இலங்கையின் மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரி சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கையின் மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனைகளில் நோயாளிகள் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயாளிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகள் குறித்த அறிக்கைகள் சரியானவையா என்பது குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன,இந்த நோயாளிகளை சுகாதார அமைச்சின் ஆய்வுகூடங்களில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியவேளை இந்த தவறுகள் தெரியவந்துள்ளதுடன் பலரிற்கு நோயில்லை என்பது உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பிலியந்தல மீன் வியாபாரிக்கு முதலில் கொரோனா வைரஸ் என சோதனைகள் முடிவுகள் மூலம் தெரியவந்ததையும்,பின்னர் அவர் நோயாளியில்லை என்பது உறுதியானதையும் மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர்உறுதிசெய்துள்ளார்.

இதன் காரணமாக தனிமைப்படுத்தல் நடைமுறையில் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய்களிற்கான தேசிய நிறுவகம் மாதிரிகளை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்திற்கு அனுப்புவதற்கு ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தது என தெரிவித்துள்ள அவர் இது சுகாதார அமைச்சின் கீழ் வராது அமைப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆய்வுகூடங்களில் பல வசதிகள் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் 19 பிசிஆர் பரிசோதனை முடிவுகள் குறித்த அறிக்கைகளின் துல்லிய தன்மை குறித்து பல விடயங்களை நாங்கள் அவதானித்துள்ளோம்,முக்கிய விடயங்களில் கவனக்குறைவு இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள அவர் இது குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளாமல் சுகாதார அமைச்சு தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொண்டால் மக்கள் இந்த சோதனைகளில் நம்பிக்கை இழப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments