மலையகத்தில் சேவல் கூவும்போது வடகிழக்கில் உதயசூரியன் தோன்றும்! பனங்காட்டான்


சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஊடாகத் திணிப்பது சில அரசியல்வாதிகளின் கேவலமான போக்கு. மலையகத் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மரணத்துக்கு அனுதாபச் செய்தி வெளியிட்ட கோதபாய ராஜபக்ச, சக்திவாய்ந்த பயங்கரவாத அமைப்பினால் விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனிநாடு என்ற கருத்துக்கு ஆதரவு அளிக்க அவர் மறுத்துவிட்டாரென்று இல்லாத ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார். இது மறைந்த ஆறுமுகன் தொண்டமானை அவமானப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது. 

கால்நூற்றாண்டுக்கு மேலாக இலங்கைவாழ் மலையகத் தமிழரின் தலைவராகவும், அமைச்சராகவுமிருந்த ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மரணம், கொரோனாப் பிரச்சனையையும் தேர்தல் தொடர்பான விவகாரங்களையும் சற்றே பின்தள்ளியுள்ளது. 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் நிறுவனரும், நீண்டகால தொழிற்சங்கவாதியும், பலவேறு அமைச்சர் பதவிகளை வகித்தவருமான (அமரர்) சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனார் என்பதால், மிகக்குறுகிய காலத்திலேயே அரசியலில் முகிழ நேர்ந்தது. 

சௌமியமூர்த்தி தொண்டமானின் ஒரே மகன் இராமநாதன். இவரும் சிலகாலம் மாகாண அரசியலில் அங்கம் வகித்திருந்தார். எனினும், இவரது மகனான ஆறுமுகனே விரைவாக அரசியல் அரங்கில் தமது பேரனாரின் இடத்தைக் கைப்பற்றினார் என்று சொல்ல வேண்டும். 

இந்த வாரப் பத்தியில் ஆறுமுகம் தொண்டமானின் அரசியல் வரலாறு, வகித்த பதவிகள், ஏற்படுத்திய சாதனைகள் எதனையும் எழுதுவது எனது நோக்கமல்ல.

ஆனால், சில அரசியல்வாதிகள் எவராவது ஒரு முக்கியபுள்ளியின் மரணத்தையொட்டி விடுக்கும் அனுதாபச் செய்தியில் தமது எண்ணங்களை அல்லது சுயகருத்துகளை நாசூக்காகப் புகுத்தி அதில் அரசியல் லாபம்பெற முயற்சிக்கும்போது, அதனைச் சுட்டிக்காட்டி பொய்யை எடுத்துரைப்பது ஓர் ஊடகவியலாளனின் கடமை என்று கருதுகிறேன். 

ஆறுமுகன் தொண்டமானின் மரணத்தையொட்டி ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச அனுதாபச் செய்தி விடுத்திருந்தார். இதன் நடுப்பகுதியில் வரும் ஐந்து வரிகள் பின்வருமாறு அமைந்துள்ளன:

'தமிழ்ச் சமூகம் முகம் கொடுத்த பிரச்சனைகளை சரியாக அறிந்திருந்த தொண்டமான் அதற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். அக்கால கட்டத்தில் செயற்பட்டு வந்த சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பினால் விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனிநாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார்" என்று இங்கு கோதபாய தெரிவித்துள்ளார். 

எப்போது யாரால் ஆறுமுகன் தொண்டமானுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்ற கேள்வி முதலில் எழுகிறது. சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பு, தனிநாடு என்ற கருத்து போன்ற வார்த்தைகள் வழியாக விடுதலைப் புலிகள் என்பது மறைபொருளாக எடுத்துக் கூறப்பட்டு, அவர்களால் ஆறுமுகன் தொண்டமானுக்கு பயமுறுத்தல் கொடுக்கப்பட்டது என்ற தோற்றத்தை உருவாக்க கோதபாய ராஜபக்ச இங்கு முனைந்துள்ளமை சந்தேகத்துக்கிடமின்றி தெரிகின்றது. 

ஆறுமுகன் தொண்டமான் தமிழர் பிரச்சனை, அவர்கள் அரசியல் போக்கு, அவர்களின் விடுதலைப் போராட்டம் என்பவைகளையிட்டு என்ன நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை ஆய்வதற்கு முன்னர், அவரது பேரனார் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறானதாக இருந்தது என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 

1961ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் முன்னெடுப்பில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து நடத்திய சத்தியாக்கிரகத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்ட வேளையில், அதற்கு ஆதரவு வழங்கும் முகமாக மலையகமெங்கும் ஒருநாள் அடையாள சத்தியாக்கிரகத்தை அவர் ஏற்படுத்தினார் என்பதை இப்போது பலரும் மறந்திருக்கலாம். 

1970களில் - மிக முக்கியமான நெருக்கடி காலத்தின்போது தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோரோடு திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் தமது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் அதில் இணைத்துக் கொண்டாரென்பதையும், அந்த முக்கிய மாநாட்டுக்கு அவர் நேரடியாகச் சமூகமளித்து தமிழ் மக்களின் ஏகோபித்த மரியாதையை பெற்றுக் கொண்டாரென்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. 

1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவேளை தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று மாற்றப்பட்டதையடுத்து சௌமியமூர்த்தி தொண்டமான் தமது நிலைப்பாட்டை விளக்க நேர்ந்தது. 

'வடக்கும் கிழக்கும் இணைந்து தனிநாடாவது நிலப்பரப்பைப் பொறுத்தளவில் சாத்தியப்படலாம். ஆனால் புவியியல் அடிப்படையில் இலங்கையின் மத்தியிலுள்ள மலைப்பாகத்தை அதனுடன் இணைக்க முடியாது" என்பதை உணர்ந்து அதை அறிக்கை மூலம் தெளிவுபடுத்திக் கொண்டார். 

இதற்காக அவர் ஈழத்தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்கவில்லையென்றோ அல்லது அதற்கு எதிராக செயற்பட்டாரென்றோ எவரும் கூற முடியாது. 

குறிப்பிட்டுச் சொல்வதானால், 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வெற்றிக்காக அவர் குரல் கொடுத்தார். அதனை அவர் தமது பின்வரும் சொந்த வார்த்தைகளால் வெளிப்படுத்தினார்: 

'மலையகத்தில் சேவல் கூவும்போது, வடகிழக்கில் உதயசூரியன் தோன்றும்" என்பதே அவரது வாசகம். 

அவரது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தேர்தல் சின்னம் சேவல், கூட்டணியின் தேர்தல் சின்னம் உதயசூரியன். அர்த்தம் புரிகிறதா? அறிவார்ந்த அரசியல் ஞானமுள்ள ஒருவரால் மட்டுமே தமது இனம்சார் நிலைப்பாட்டை இவ்வாறு எடுத்துக்கூற முடியும். 

இனி, ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் சிந்தனைகளையும், வெளிப்பாடுகளையும் பார்க்கலாம். விடுதலைப் போராட்ட காலத்தில் தமது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குழுவுக்குத் தலைமை தாங்கி வன்னி சென்ற இவர், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இன்னொரு சந்தர்ப்பத்தில் சு.ப.தமிழ்ச்செல்வனை அவர் சந்தித்தது பற்றியும், தமிழர் பிரதேசங்களில் தமது அமைச்சினூடாக அவர் மேற்கொள்ளவிருந்த அபிவிருத்திகள் பற்றியும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அண்மைய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். 

இவைகளுக்கப்பால், விடுதலைப் புலிகள் இவர்மீது எப்போதும் எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லையோ, அதுபோன்று விடுதலைப் புலிகள் பற்றியோ அவர்களின் விடுதலைப் போராட்டம் பற்றியோ எந்த வேளையிலும் எதிர்மாறான கருத்து எதனையும் இவர் கூறவில்லை. 

அதேசமயம் தமிழர் அரசியல், அவர்கள் செல்நெறி, அவர்களின் வாக்களிப்பு போன்றவற்றில் அவர் எவ்வாறான எண்ணக்கருத்துகளை கொண்டிருந்தாரென்பதை சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு ஊடகவியலாளர் பா.நிரோஸ் என்பவருக்கு வழங்கிய செவ்வியில் தெரவித்திருந்தவைகளை நோக்குவது பொருத்தமானது. 

இச்செவ்வியின் முக்கியமான இரண்டு கேள்விகளையும் அதற்கு அவர் வழங்கிய பதில்களையும் இங்கு அவ்வாறே தருகின்றேன்:

கேள்வி - வடக்கு, மலையகம் என அமைச்சின் சேவைகளை முன்னெடுப்பது சவாலாக இருக்கிறதா?
பதில் - எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சு தனியாக மலையகத்துக்கு மாத்திரம் சேவையாற்றக்கூடியது அல்ல. அது முழு இலங்கைக்குமானது. வடக்கு மக்களும் என் மக்கள்தான். அவர்களும் இலங்கைப் பிரஜைகள்தான். அது எனக்கு ஒரு சவாலாகத் தெரியவில்லை. நான் விரும்பிச் செய்கிறேன். 

கேள்வி - வெளிமாவட்டங்களில் வாழும் மலையக மக்கள், அங்குள்ள பெரும்பான்மை மக்களால் தாக்கப்படுவது தொடர்கிறதே?
பதில் - அடிப்படையில் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் அவர்களை எவ்வாறு அடையாளப்படுத்துகிறார்கள் என்பதுதான். தேர்தல் காலங்களில் தமிழ் பிரதிநிதிகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. பெரும்பான்மையினரையே அவர்கள் தெரிவு செய்கிறார்கள். தேர்தல் காலங்களில் பெரும்பான்மை இனத்தவரோடு இருப்பதுதான் தங்களுக்குப் பாதுகாப்பென அவர்கள் நினைக்கிறார்கள்.  

வடக்கின் அபிவிருத்தி என்பது அவர்கள் தனிநாடு கோருவதால் பிரித்துப் பார்க்கப்பட வேண்டியது அல்ல என்ற இவரது கருத்து இங்கு கவனிப்புக்குரியது. அடுத்ததாக வெளிமாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தங்களை அடையாளப்படுத்தும் தங்கள் இனத்தவருக்கு வாக்களிக்காது பெரும்பான்மை இனத்தவருக்கு வாக்களிப்பதால் ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையையும் ஆறுமுகன் தொண்டமான் இங்கே அச்சொட்டாக எடுத்துக் கூறியுள்ளார். 

அதுமட்டுமன்றி, தமது நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவு குறைவாகக் கிடைத்தமைக்கான காரணம் கோதபாய ராஜபக்ச யுத்தத்தைச் செய்தாரென்று மக்களிடத்திலிருக்கும் கருத்தே காரணமென்று கூறியிருப்பதையும் இங்கு கவனிக்கலாம். 

பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களின் விம்பமாக விளங்கும் கோதபாய - மகிந்த அரசாங்கத்தில் ஓர் அமைச்சராகவிருந்தவாறு அந்தப் பெரும்பான்மை இனத்தவரோடு இருப்பதால் ஏற்படக்கூடிய பாதகங்களை எடுத்துக் கூறும் துணிச்சலை இங்கு குறிப்பிட வேண்டும்.  

இவ்வேளையில், இவரது பேரனார் சௌமியமூர்த்தி தொண்டமானிடம் ஓர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியையும், அதற்கு அவர் வழங்கிய பதிலையும் சுட்டிக்காட்டி இப்பத்தியை முடிப்பது பொருத்தமானது:

கேள்வி - ஓர் அமைச்சராக, ஒரு தொழிற்சங்கவாதியாக, தமிழர் உரிமைக்காகப் போராடும் ஒருவராக, எவ்வாறு சமகாலத்தில் உங்களால் இயங்க முடிகிறது?

பதில் - ஒரு பெண்ணை எடுங்கள். அவர் ஒரு தாயாக, ஒரு மனைவியாக, ஒரு சகோதரியாக எவ்வாறு சமவேளையில் இயங்குகிறார்!

No comments