கொரோனா தடுப்பு நிலையங்களை தமிழர் தாயகத்தில் அமைப்பது இன்னொரு திட்டமிட்ட இனவழிப்பா? பனங்காட்டான்


நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட வேண்டுமென்பதிலும், அடுத்த தேர்தலை எப்போது நடத்த வேண்டுமென்பதிலும் அக்கறை காட்டும் தமிழ்
அரசியல்வாதிகள் கொரோனா கால நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்கிறார்கள்? நோய்த் தடுப்பு நிலையங்களை தமிழர் தாயகத்தில் கோதபாய அரசு அமைப்பதை தடுத்து நிறுத்த இவர்கள் இதுவரை என்ன செய்தார்கள்? இவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த குற்றத்துக்காக மக்கள் தாமே தனித்து நின்று போராட வேண்டுமென்பது தலையெழுத்தா?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரோனா நோய் பற்றிய அறிவிப்பு வந்தபோது, சுமார் எழுபது  வயதுக்கு மேற்பட்டவர்களையே இது தாக்குமெனவும் மரணத்தை விளைவிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வயதினரான மூத்தோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்குமென்பதாலும், இவர்கள் ஏற்கனவே வெவ்வேறு நோய்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என்பதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை நிரூபிப்பது போன்று இத்தாலியிலிருந்து கனடா வரை மரணித்தவர்களில் சுமார் நாற்பது  வீதத்துக்கும் அதிகமானவர்கள் மூத்தோர்களாகவே அடையாளம் காணப்பட்டனர்.

கனடாவைப் பொறுத்தளவில் ஒன்ராறியோ மற்றும் கியுபெக் மாகாணங்களில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசித்தவர்களே இந்த மாகாணங்களின் மொத்த மரணங்களின் எண்ணிக்கையில் எழுபத்தியிரண்டு வீதமானவர்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையங்களில் அதிசிறப்பான நோயாளர் பராமரிப்பு மருத்துவ வசதியை ஏற்படுத்தவென கனடிய ராணுவத்தினர் இப்போது பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியிருக்கும் மூத்தோர்களையாவது மரணத்திலிருந்து காப்பாற்ற இது வழிவகுக்கக்கூடும்.

அதேசமயம், சிறுவர் - இளையோர் - நடுத்தர வயதுக் குடும்பத்தினர் மரணங்களும் இப்போது பதியப்பட்டு வருகிறது. அண்மையில் வெளியான புள்ளிவிபரம் ஒன்றின்படி கனடாவில் நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைபெற்று வந்தவர்களில் 32 வீதமானோர் 35 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

5 வயதுக் குழந்தையொன்றும் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமானது என்ற தகவல் எவராலும் நம்ப முடியாதிருந்தது.

கடந்த சில நாட்களில் கொரோனா பரவல் சற்று சரிவு நிலைக்குச் சென்றுவிட்டதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முன்னைய வாரங்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கையில் இவ்வாறு காணப்படலாம். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காணப்படவில்லை.

ஏற்றமும் இறக்கமும் மாறிமாறிக் காணப்படுகிறது. கொரோனா ஏற்படுத்தியுள்ள எதிர்பாராத பாதிப்பு, சமூக மருத்துவ வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனேகமான வைத்தியசாலைகளில் பல சத்திரசிகிச்சைகள் நடைபெறவில்லை. நோய்த்தொற்று அச்சம் காரணமாக வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வதை பலர் தவிர்த்துள்ளனர். இதனால் எதிர்பாராத பல மரணங்கள் பதிவுக்குட்படாது இடம்பெற்றுள்ளன.

இருதயநோய், நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு போன்றவைகளுக்கு சிகிச்சைபெற முடியாத கணிசமானோர் வைத்தியசாலைகளுக்குச் செல்லாது கடந்த சில வாரங்களில் தங்கள் வாழ்விடங்களிலேயே இயற்கை மரணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை கொரோனாக்கால மரணங்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

இதனை எழுதும் வேளையில், உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டிவிட்டது. இதில் மூன்றிலொரு பங்கினர் அமெரிக்கர்கள்.

உலகில் மரணித்தோர்களில் அமெரிக்கர்கள் நான்கிலொரு பங்குக்கும் அதிகமானோர். சுமார் எழுபதினாயிரம் அமெரிக்கர்கள் இந்நோயால் மரணிக்கக்கூடுமென ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்வு கூறியுள்ளார். ஆனால், இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டலாமென மருத்துவ வட்டாரங்கள் கணிப்பிட்டுள்ளன.

நியுயோர்க் நகரத்திலுள்ள புறூக்லின் பிரதேசத்திலுள்ள இறுதிச் சடங்கு கட்டிடமொன்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட பாரஊர்திகளில் எண்ணுக்கணக்கற்ற உருக்குலைந்த சடலங்கள் இந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இம்மரணங்கள் கொரோனாவினால் ஏற்பட்டவையென்று கூறப்படுகிறது.

நிலைமை இப்படியிருக்கையில், சில நாடுகள் பொருளாதார சீரடைவை ஏற்படுத்துவதற்காக படிப்படியாக நிலைமையை வழமைக்குக் கொண்டுவர முனைப்புக் காட்டுகின்றன. இதற்கென மே மாதத்தை இவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

அவசரப்பட்டு எடுக்கப்படும் இம்முடிவினால் கொரோனா தனது இரண்டாம் சுற்றை ஆரம்பிக்க வசதியாகலாமென மருத்துவ மற்றும் பாதுகாப்புத் துறையினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் இதனை எழுதும் வேளையில் நோய்த் தொற்றுள்ளோர் எண்ணிக்கை எழுநூறைத் தாண்டியுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பகா உட்பட சில மாவட்டஙகள் கடந்த சில வாரங்களாக முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

தமிழரின் கலாசார தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்தில் மார்ச் மாதம் 16ம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் மாறி மாறியும், சிலசமயம் பகல் வேளையில் நீக்கப்பட்டும் அமுல் செய்யப்படுகிறது.

சுவிஸிலிருந்து அங்கு சென்ற ஒரு போதகரால் பரப்பப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டு நாற்பது நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், இங்கு நோயால் அவதியுறும் மக்களைவிட பசியால் வாடும் மக்களே அதிகமென கூறப்படுகிறது. புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு அங்கிருந்து பல வழிகளால் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையில் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்துவதற்கான நிலையங்களை தமிழர் தாயகத்தில் படையினர் அமைத்து வருகின்றனர். பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் நேரடியாக வடக்குக்குச் சென்று அதற்கான இடங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

ஆரம்பத்தில் பலாலி ராணுவ முகாமுக்குள் இதனை அமைத்தது கோதபாய அரசு. பின்னர் இளவாலையில் மூன்று பாடசாலைகளை ராணுவம் கைப்பற்றியது.

கோப்பாயில் கல்வி நிலைய கட்டிடமொன்றைக் கைப்பற்ற படைத்தரப்பு முயற்சித்தபோது பொதுமக்கள் துணிச்சலாக எதிர்த்து நின்று அதனை முறியடித்தனர்.

ஆனால், முல்லைத்தீவில் வற்றாப்பளையில் பாடசாலைக் கட்டிடமொன்றை பெற்றோர் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ராணுவம் கைப்பற்றியுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ். பல்கலைக்கழகத்தின் சில கட்டிடங்கள் போன்றவற்றையும் நோய்த்தடுப்பு நிலையங்களாக்க படையினர் முயன்று வருகின்றனர்.

ராணுவம், கடற்படை, வான்படை ஆகியவைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சில நூற்றுக்கணக்கானோரே நோய்க்குள்ளானதாக பொய்யான தகவலை வெளியிடும் ஆட்சித்தரப்பு அவர்களை தமிழர் தாயகத்துக்கு அனுப்பி வைக்கிறது.

தாயகத் தமிழர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி சமூகப் பரவலை தடுத்து வருவதைப் பொறுக்க முடியாத சிங்கள ஆட்சிபீடம் இந்தப் பிரதேசங்களை கொரோனா நோய்ப் பிரதேசங்களாக மாற்றுவதற்காகவே இங்கு இதற்கான நிலையங்களை அமைக்கின்றது போலும்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற பல பிரதேசங்கள் தெற்கில் இருக்கும்போது இதற்கான நிலையங்களை தமிழர் தாயகத்தில் ஏன் அமைக்கிறார்கள்?

மிகத் தந்திரமான முறையில் இன அழிப்பை ஏற்படுத்தும் திட்டமாக கோதபாய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எத்தனை நாட்களுக்கு பொதுமக்களால் தனித்து நின்று தடுக்க முடியும்?

பொதுத் தேர்தல் பற்றியும், நாடாளுமன்றத்தைக் கூட்டுவது பற்றியும், சிங்கள அரசியல்வாதிகளை நீதிமன்றத்தில் பிணை எடுப்பது பற்றியும் அக்கறை காட்டும் தமிழ் அரசியல் தலைவர்கள் தங்கள் மண்ணை கொரோனாவுக்கு இரையாக்கும் சிங்கள ஆட்சியாளர் செயலையிட்டு மௌனம் சாதிப்பது ஏன்?

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென அறிக்கை விடும் தமிழ் அரசியல்வாதிகள் தாமாக முன்வந்து தனிப்பட்ட முறையில் என்ன உதவியைப் புரிந்தார்கள்?

இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து ஜனாதிபதிவரை அனைவரும் தங்கள் மாத ஊதியத்தில் முப்பது வீதத்தை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கியுள்ளனர். இந்தியாவிலுள்ள அரசாங்க ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை இதற்கு வழங்கியுள்ளனர். இலங்கையிலும்  அரச ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு நாள் பங்கு இதற்கென எடுக்கப்பட்டுள்ளது.

மாதமொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊதியம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ன பங்களிப்பு செய்தனர்? மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள், பிரதேச சபை உறுப்பினர்களாக இருப்பவர்கள் தாங்கள் பெற்ற, பெறுகின்ற ஊதியத்தில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு எத்தனை வீதத்தை வழங்கியுள்ளார்கள்.

நோய்த்தடுப்பு நிலையங்களைத் திறக்கவிடாது தடுக்கும் மக்களின் கூட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரைக்கூட காணவில்லையே. மக்களை மறந்துவிட்டு நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும், தேர்தலை பின்போடுமாறும் கோ~மிடும் இவர்களின் கோரி;க்கையை கோதபாய ராஜபக்ச மறுத்துவிட்டார்.

இனியென்ன செய்யப் போகிறார்கள்? நீதிமன்றப்படி ஏறப்போகிறார்களா? மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பிரதம நீதியரசராக இருந்த ~pரானி பண்டாரநாயக்காவுக்கு என்ன நடைபெற்றதென்பதை நினைத்துப் பார்த்தால் நீதித்துறையின் புனிதத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ஊடக அறிக்கைகள் வாயிலாகவும், நீதிமன்றப் படியேற்றங்கள் வாயிலாகவும் ஏட்டிக்குப் போட்டி அர்ச்சனை வாயிலாகவும் அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் நிகழ்கால அவசியத் தேவையை உணர்ந்து, நாளாந்த வாழ்க்கைக்கு கொரோனாவோடு போராடும் மக்களுக்காக பணியாற்ற முன்வர வேண்டும்.

ஐந்தாண்டுக்கு ஒரு தடவை தமக்கு வாக்களிப்பவர்களை, ஐந்தாண்டுக்கு ஒரு தடவை சந்தித்தால் போதுமென்று எண்ணுகிறார்களா?

கொரோனாவை மையப்படுத்தி இன்னொரு திட்டமிட்ட இனவழிப்பை சிங்கள அரசு மேற்கொள்வதை தடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் எப்போது முன்வரப்போகிறார்கள்?

No comments