முதல்நாள் போர்க்குற்ற நாள் மறுநாள் போர்வெற்றி நாள் - பனங்காட்டான்

இருபது வருடங்கள் ராணுவ அதிகாரியாகவும் பத்து வருடங்கள் ராணுவத்தை நெறிப்படுத்தி இனப்படுகொலை புரிந்த பாதுகாப்புச் செயலாளராகவுமிருந்த கோதபாய ராஜபக்ச, இப்போது சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ஜனாதிபதி பதவி வழியாக சுவை பார்க்க விரும்புகிறார். சிவில் நிர்வாப் பதவிகளுக்கு ராணுவத்தினரை நியமிப்பதும், சர்வதேச அரங்கை அச்சுறுத்தும் எச்சரிக்கைகளை வீசுவதும் வரப்போகும் பொதுத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக சிங்கள பௌத்த வாக்குகளை சுவீகரிக்க முனையும் ஓர் உத்தியா?

முள்ளிவாய்க்கால் என்பது புறமுதுகு காட்டாத நெஞ்சுர வீரர்களின் உறைவிடமென்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தடைகள் எத்தனை வரினும் அவைகளைத் துடைத்தெறியும் மறத்தமிழரின் தீரத்துக்கான குருசேத்திரம் முள்ளிவாய்க்கால் என்பதை அம்மக்கள் இன்னொரு தடவை நிலைநாட்டியுள்ளனர்.

உறவுகளுக்காக தீபம் ஏற்றப் புறப்பட்ட உறவுகளை, கொரோனாவைக் காரணம் காட்டி திருப்பி அனுப்ப முனைந்த சிங்கள அரசும் அதன் ஏவற்படைகளும் பார்த்திருக்க தமிழர் தாயகமெங்கும் சுடரஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

கொல்லப்பட்ட உறவுகளுக்கு வணக்கம் செலுத்த மறுக்கும் சிங்கள ஏகாதிபத்தியம், அக்கொலைகளைப் புரிந்தவர்களை வீரர்களாக மதித்துத் துதிக்கும் கேவலம் இலங்கையில் மட்டும்தான் நடைபெறுமென்பது உலக அரங்கில் பதிவாகியுள்ளது.

மே 18 போர்க்குற்ற நாள். மே 19 போர் வெற்றி நாள்.

கொல்லப்பட்ட இனம் மே 18ல் அழுது புரண்டு அஞ்சலி செலுத்த, கொலை புரிந்தவர்களை மே 19ல் பட்டஞ்சூட்டி மதிப்பளித்து குதூகலிப்பது இனத்துவேசமுள்ள இலங்கையில் மட்டும்தான் இடம்பெறும்.

இவ்வேளை சர்வதேச அரங்கிலிருந்து வெளிவந்த மூன்று முக்கிய அறிக்கைகள் இனவழிப்புக்குள்ளான இனக்குழுமத்துக்கு சற்று ஆறுதலும் ஒருவகை நம்பிக்கையும் தருவதாக அமைந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட தமிழினப் படுகொலைகளுக்காக தமிழருக்கு நீதி கிடைக்கத் தாமதமாகலாம், ஆனால் நிச்சயமாக நீதி கிடைக்கும் - அதுவரை நம்பிக்கை இழக்கக்கூடாதென்று தெரிவித்துள்ளார் உண்மை மற்றும் நீதிக்கான செயற்பாட்டு நிலைய நிறைவேற்று இயக்குனர் ஜஸ்மின் சூக்கா.

இலங்கையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்படும் நிலையில் அவர்களுக்கான நீதியையும் இழப்பீடுகளையும் பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்ய சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

இலங்கை அரசாங்கம் உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு அளித்த உறுதிமொழிகளுக்கிணங்க நடவடிக்கை எடுக்காது கைவிட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் மனித உரிமைகள் கண்காணிப்பக தெற்காசிய பிராந்திய இயக்குனர் மீனாட்சி கங்குலி.

இதுவரை பிளவுபடாத ஒரு நாட்டில் ஆளும் தரப்பிலுள்ள பெரும்பான்மை இனம் (எண்ணிக்கையில்), அந்நாட்டின் மூத்த குடிகளை சிறுபான்மையினர் (எண்ணிக்கையில்) என்று பட்டம் சூட்டி சாட்சியமின்றி நடத்திய யுத்தத்தில் மேற்கொண்ட இனப்படுகொலைக்கு எப்போது நீதி கிடைக்கும்?

கொரோனா காலம் இலங்கைக்கு இதனால் பெரும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது. இவ்வருட மார்ச் மாதத்தில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையின் கூட்டம் கொரோனாவால் இடைநடுவில் நிறுத்தப்பட்டது. இவ்வருட செப்டம்பர் மாத அமர்வு நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் முழுமையான ராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த ராஜபக்ச குடும்பம் முழு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற வேண்டுமென்ற அரசியல் சட்டம் யூன் 2ம் திகதியுடன் முடிவடைகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு யூன் 20ம் திகதி தேர்தல் நடைபெற மாட்டாதென்பது நிச்சயமாகிவிட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்னாலுள்ள வழக்குகளின் தீர்ப்பை, காலத்தை இழுத்தடிப்பதற்கான உபாயமாக ராஜபக்ச தரப்பு பயன்படுத்துகிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை சரியென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கின், தேர்தல் நடைபெறும் காலம்வரை நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டியதில்லை. தீர்ப்பு அதற்கு எதிராக வருமாயின் தாம் செய்யப் போவது என்ன என்பதை கோதபாய தமது அமைச்சரவைக்கு முற்கூட்டியே அறிவித்துவிட்டார்.

அதாவது, நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நாடாளுமன்றத்தை மீளக்கூட்டும் வர்த்தமானியை முதலில் வெளியிட்ட பின்னர், மீண்டும் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாகவும், அதன் ஆயுட்காலம் முடியும்வரை (ஆகஸ்ட் மாதம்) அவ்வாறு செய்யத் தமக்கு நிறைவேற்று அதிகாரம் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் செய்வாரோ இல்லையோ, அவ்வாறு தம்மால் செய்ய முடியுமென்று அவர் எண்ணிவிட்டாரென்பது, நீதிமன்றத் தீர்ப்பை ஏமாற்றி தம்மால் அரசியல் செய்ய முடியுமென்பதை அவர் உறுதி செய்துவிட்டாரென்பதைப் பகிரங்கப்படுத்துகிறது.

இதற்குப் பின்னர், நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறுதான் வந்தாலும், அவரது செயற்பாட்டைப் பொறுத்தளவில் இரண்டும் ஒன்றுதான் என்பது நன்கு தெரிகிறது.

ராணுவத்தில் இருபது ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றபின்னர், பத்தாண்டுகள் ராணுவத்துக்குப் பொறுப்பான செயலாளராகவிருந்து கொடூரமான யுத்தத்தை நடத்திய ஒருவரின் மனோவியல் எப்போதும் ராணுவ வயப்பட்டதாகவே இருக்குமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

அதனையே செயல்வடிவமாக்கவென படைத்துறையில் பணியாற்றிய 22 அதிகாரிகளை - பாதுகாப்புச் செயலாளர், ராணுவத் தளபதி பதவியிலிருந்து இறுதியாகப் பதவியேற்ற சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிவரை நியமித்துள்ளார்.

இந்த நியமன முறைமையைப் பார்க்கும்போது சிவில் சேவை பரீட்சை எழுதி சித்தியடைந்து இப்பதவிகளை வகிக்கும் அதிகாரிகளைவிட படைத்துறைகளில் அதிகாரிகளாகவிருந்தவர்களே இப்பதவிகளுக்குத் தகுதியானவர்களென கோதபாய எண்ணியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

இதே நிலை தொடரவுள்ளதை போர் வெற்றிநாள் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை சுட்டி நிற்கிறது. அந்த அறிக்கையின் முக்கிய பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது:

'ஓய்வு பெற்ற முப்படையினரும் சிவில் பிரஜைகள்தான். அன்று இருந்த மருத்துவர், ஆசிரியர், உழவர், தொழிலாளர் சக்தியுடன் இன்று படையினரும் இணைந்துள்ளனர். எனவே நிச்சயமாக எமது அரசாங்கம் அதிகாரத்திலுள்ளபோது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகிப்பார்கள்" என்று மகிந்த அடித்துக் கூறியுள்ளார்.

வெள்ளப்பெருக்கு, தொற்றுநோய், கோவிட் - 19 அச்சுறுத்தல் காலங்களிலும், அனர்த்த சூழ்நிலையிலும் படையினர் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் பணியாற்றியதை முதன்மைப்படுத்தியுள்ள மகிந்த, அதனையே அவர்களை சிவில் நிர்வாகத்தில் உட்புகுத்துவதற்கான தமைமை எனக்கூறியுள்ளது நகைப்பிற்கிடமானது.

இவர் கூறும் இவரது படையினர் இலங்கையின் யுத்த வரலாற்றில் எவ்வாறாக மனித உரிமைகளை நசுக்கி, மனித குலத்துக்கெதிரான போர் நடத்தி இனப்படுகொலை புரிந்தனர் என்பதை சர்வதேச அமைப்புகள் மீள மீள அறிக்கையிட்டு வருவதை மகிந்த படிப்பதில்லைப் போலும்.

ஜஸ்மின் சூக்கா. நவநீதம்பிள்ளை, மீனாட்சி கங்குலி ஆகியோர் இந்த மாதம் விடுத்த அறிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆற்றுப்படுத்துபவையாக அமைகின்ற வேளையில், மகிந்தவின் அறிக்கை அச்சத்தையூட்டுவதாக அமைகிறது.

இலங்கைப் படையினர் அந்நிய நாட்டுடன் சண்டையிட்டு வெற்றி பெறவில்லை. இலங்கையின் எல்லைக்கடவையில் அல்லது கடற்பிராந்தியத்தில் வெளிநாட்டுப் படையுடன் போரிட்டு நாட்டைக் காப்பாற்றவில்லை.

உள்நாட்டுக்குள் தமது உரிமை வேண்டி குரல் கொடுத்த நாட்டில் வாழும் இன்னொரு இனத்தின் மீது நடத்திய படுகொலைக்கு உலகம் நீதி வேண்டி நிற்கும்வேளையில் அதனை நோக்கி கோதபாய ஒரு சவால் விடுத்துள்ளார்.

'எனது படையினர் மீது எவரும் கை வைக்க முடியாது" என்று ஆரம்பிக்கும் இவரது உரை இவ்வருட போர் வெற்றி நாளின் பிரகடனமாகியுள்ளது. தம்மை இன்னும் ஒரு ராணுவ அதிகாரியாக இவர் எண்ணுகின்றார் என்பதையே ஷஎனது படையினர் மீது| என்ற சொற்தொடரின் அதிகாரத் தொனி புலப்படுத்துகிறது.

'நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்த எனது படையினரை அழுத்தத்துக்கு உள்ளாக்க நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எனது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதாவதொரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகிக்குமாயின் அவற்றின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக் கொள்ள நான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை" என்பது இவரது உரையின் முக்கிய அம்சம்.

இவர் கூறும் இவரது படையினர் இலங்கையின் யுத்த வரலாற்றில் எவ்வாறான யுத்த மீறல்களைப் புரிந்தனர் என்பதை சர்வதேசம் நன்கறியும். அவை கோரும் நீதி நியாய விசாரணையை மறுப்பதற்கான ஒரு வழியாக இவ்வாறான சவாலை கோதபாய விடுகின்றாரா?

அல்லது விரைவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளை ஒட்டுமொத்த அடிப்படையில் சுவீகரித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக தம்மை சர்வதேசத்துக்கு அஞ்சாதவன் என்று படம் காட்ட எத்தனிக்கிறாரா?

பத்தாண்டுகள் ஜனாதிபதியாகவிருந்த மகிந்த, அடுத்த ஐந்தாண்டும் அப்பதவியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி அதே சிங்கள பௌத்த மக்களால் எவ்வாறு தட்டி வீழ்த்தப்பட்டதென்ற வரலாற்றை கோதபாய நினைவுபடுத்துவது அவசியம்.

பதிவு இணையத்திற்காக
23-05-2020

No comments