ஆமியிடமா கொரொனா?


கொரோனா வைரஸ் ஒழிப்பு செயற்பாட்டின் இடையே சுகாதார சேவைக்கான கடமைகளை படையினரிடம் அரசாங்கம் கையளித்துவிட்டது என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த குற்றச்சாட்டை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முற்றாக நிராகரித்துள்ளது. 

இலங்கையில் கொரோனா வைரஸ் ஒழிப்பு செயற்பாடுகளில் பொலிஸாருக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் மேலதிகமாக படையினரும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக படையினரால் தற்போது 20க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தல் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கொரோனா வைரஸ் ஒழிப்பைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த சுகாதார சேவையையும், அதன் வகிபாகங்களையும் அரசாங்கம் படையினருக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது என விமர்சனம் வெளியிட்டிருந்தார்.

எனினும், அப்படியொரு நடவடிக்கையை அரசாங்கம் செய்யவில்லை என்று கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-“பிரதமர் தலைமையில் இன்று நடந்த சந்திப்பானது மிகவும் முக்கியத்துவமான இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டாலும், ரணில், சஜித் மற்றும் ஜே.வி.பி அணியினர் கலந்துகொள்ளவில்லை. பலரும் பல வித யோசனைகள், கருத்துக்களை முன்வைத்தார்கள்.

இன்று எதிரணியினர், எமக்கு சர்வதேசத்திடமிருந்து பாரிய நிதி கிடைத்திருக்கிறது எனவும், அவற்றை நாங்கள் மூடிமறைத்துள்ளோம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இன்றைய சந்திப்பில் இதுகுறித்து கருத்து வினவப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதியமைச்சின் செயலாளரிடம் வினவினார். இதற்குப் பதிலளித்திருந்த அவர், சர்வதேச அமைப்பு ஒன்றே இதுவரை 120 டொலர் மில்லியன் பெறுமதியான அறிவிப்பை வெளியிட்டது. சில நாடுகள் அறிவித்திருந்தாலும் நிதி இதுவரை கிடைக்கவில்லை என்று பதிலளித்திருந்தார்.

இந்தச் சந்திப்பை நிராகரித்த எதிரணியினர் கொரோனா ஒழிப்புக்கு எதிர்ப்பாளர்களாக இன்று காண்பித்துள்ளனர். சுகாதார சேவையின் கடமைகளை படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். அதனைக் கண்டிக்கிறோம். எங்கே இந்தப் பொறுப்புகள் படையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஒளிந்திருந்த நபர்களை புலனாய்வுப் பிரிவே கண்டுபிடித்தது. இன்று நோயினால் பீடிக்கப்பட்டவர்களை வைத்தியசாலை வரை கொண்டுவரும் வரை படையினரது சேவைகள் உள்ளன.

எனினும் சுகாதார சேவைப் பொறுப்புக்களை படையினரிடம் கையளித்த படியினால்தான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமையை மிகவும் கண்டித்து நிராகரிக்கின்றோம். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் கருத்தாக காண்கின்றோம்.” என்றார்.

No comments