விடுதலைப் புலிகள் முகாம் அமைக்க தமிழ்நாட்டில் உதவ முன்வந்த ஜமீன்தார்!

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காகப் பயிற்சி பயிற்சி முகாம்கள் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னரான
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி உடல் நலக்குறைவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலமானார்.

இவர் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காகப் பயிற்சி முகாம்கள் அமைக்க முயன்ற காலத்தில் இடம்தந்து உதவ முன்வந்தவர் என தி.மு.க. செய்தி தொடர்பாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜமீன் சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட நிலையில் இந்த சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாக பட்டம் சூடி தமிழகத்தின் கடைசி ஜமீனாக வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்த இந்த ஜமீனே புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலை நிர்வகித்து வந்தார்.

ஜமீன் சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமைந்துள்ளது. 1,000 குதிரைகளை வைத்து சிங்கம்பட்டி ஜமீனில் பராமரித்து வந்துள்ளனர். 5 தங்கப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயற்பட்டு வருகிறது.

இது குறித்து தி.மு.க. செய்தி தொடர்பாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில், “நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீர்த்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர் தான்.

இவரோடு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து அறிமுகம்.  கடந்த 1972ல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியை காவல்துறையினர் தாக்கும் போது சேலம் லூர்துநாதன், பி.காம் படிக்கும் மாணவர், வண்ணாரப்பேட்டை சுலோசனா முதலியார் பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும்போது அதுகுறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்தபோது தான் முதல் நெருக்கமான அறிமுகம்.

அதன் பின் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளுக்குச் செல்லும்போது அவர் ஊரில் இருந்தால் அவரை சந்திப்பது வாடிக்கை.

கடந்த 1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்தபோது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது.

இவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

No comments