தேர்தல் வேண்டும்:வேண்டாம்-போட்டி?


நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடித்து விடுவது தொடர்பில் கோத்தா-மகிந்த கூட்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
எனினும்  தேர்தல் தொடர்பில், தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே நேற்றைய தினம் (12) பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், ஜூன் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்துவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.


இது குறித்து நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்ற போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதித் திகதியை அறிவிக்குமாறு, தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம்,  அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், கொவிட் 19 தொற்றுப்பரவல் மற்றும் தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் என்பன, அவ்வாறு திகதியைத் தீர்மானிப்பதற்குச் சவாலாக அமைந்திருந்தன.

இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின் முடிவுக்ககாகத் தேசிய தேர்தல் ஆணைக்குழு காத்திருப்பதாகத் தெரிவித்த  ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தலுக்கு 35 நாள்களுக்கு முன்னதாகவே திகதி தீர்மானிக்கப்பட வேண்டும் எனச் சட்டம் இறுக்கமாகச் சொல்லவில்லை என்ற போதிலும், பிரசாரத் தேவைக்காகவே தாம் அதனைத் தீர்மானிப்பதாகக் கூறியுள்ளார்.

கலந்துரையாடலுக்கு 34 கட்சிகள் வந்திருந்த நிலையில், இன்று (13) 24 கட்சிகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கொரியாவில் தேர்தல் நடத்தியதைப் போன்று, இலங்கையில் தேர்தலை நடத்த முடியாது. ஜூன் மாதம் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்துவதா அல்லது தள்ளிப்போடுவதா என, இப்போது அறிவிக்க முடியாது. தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, தேர்தல் குறித்த தீர்மானம் எடுக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்தக் கலந்துரையாடலின் போது, தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பு இலக்கங்களைத் தேர்தல் ஆணைக்குழு வழங்க வேண்டுமென ஆளுங்கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்த போது, அதற்கு எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

No comments