ஏ-9 ஏரம்பு எழுதிய ''வலி சுமக்கும் நாட்கள். . .'' அனுபவப் பகிர்வு -2

அதிகாலை 3 மணியளவிலே ஓட்டோ ஒன்றிலே எடுத்துச் செல்லக்கூடிய அத்தியாவசியமான பொருட்களை மட்டும் அவசர அவசரமாகக்
கட்டிக்கொண்டு முல்லைவீதியிலே இறங்கினோம். மக்களும் வாகனங்களுமாக பிரதானவீதி நிறைந்திருந்தது. ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் இதயத்தைப் போலவே ஈருருளிகள் உட்பட வாகனங்கள் எல்லாமே தமது எல்லைகளைத் தாண்டி அம் மக்களின் பாரங்களைச் சுமந்துகொண்டு பொறுமையாக நகர்வதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தன.

எனினும் இடப்பெயர்வே அன்றாடமாகிவிட்ட பின்னர் அதை நினைத்து அதிகம் அலட்டிக்கொள்வதற்கு  எவருக்கும் அவகாசம் இருக்கவில்லை. அடுத்தகட்டம் நடக்கவேண்டியதற்காக அவர்கள் நகரவிடாத நெரிசல் நிறைந்த வீதியிலும் எறும்புகளைப்போல நகர்ந்து கொண்டிருந்தனர். எங்கு போவதென்று எந்த முடிவும் இல்லாத நிலையில் நாம் றெட்பானா சந்திக்கு வர விடிந்திருந்தது. அதற்குள் நாம் இருந்த பகுதியிலே எங்கெங்கு சரமாரியாக n~ல்கள் விழுந்தன என்ற செய்திகள் அருந்தப்பிலே கால்நடையாக வந்தவர்கள் மூலம் தெரியவந்தன.

அந்த இடத்தைவிட்டு வெகுவிரைவிலே வெளியேறிவிடவேண்டும் என்ற அவசரம் எல்லோருக்கும் இருந்தாலும்,சாத்தியத்திற்கு அப்பால் தான் மட்டும் முண்டியடித்து முன்னேறவேண்டும் என்று எவருமே அங்கலாய்க்காமல் ஊர்ந்தனர்.

அடுத்ததாக இடப்பக்கம் தேராவில் துயிலுமில்லம் அண்மித்தது. கிளி. கனகபுரம் துயிலுமில்லத்திடம் விடைபெற்றபோது திரும்பி விரைவில் வருவோம் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது அந்த மண்ணின் குஞ்சுகளின் தேராவில்கருவறைகளும் கைவிட்டுப்போய்விடுமோ என்ற அச்சம் மனதை நெருக்கியது.

அந்த நெருக்கத்தை அப்போதைக்கு மறக்கச்செய்தது துயிலுமில்லத்திற்கு முன்னாலிருந்த தேக்குமரத்தோப்பின் தோற்றம். தமிழீழ வனவளப்பாதுகாப்புப் பிரிவினரின் மரம் வளர்ப்புத்திட்டத்தில் ஒன்றாக சில வருடங்களிலே தேக்கு மரங்களால் பசேலென நிமிர்ந்தெழுந்த அப்பகுதியெங்கும் சுமார் 40 000 இற்கும் குறையாத மக்கள் தற்காலிகக்கொட்டகைகளை அமைத்திருந்தனர்.

இடையிடையே தேவையின்நிமித்தம் அமைக்கப்பட்ட ஒரு சில அடிகளே ஆழமான திடீர்க்கிணறுகள். ஆரம்பத்திலே கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் இருப்புகளை கிணறு, மலசலகூட வசதியிருக்கும் இடங்களுக்கு அருகாக அமைத்திருந்தார்கள். எனினும் விசுவமடு மற்றும் அதற்குப் பின்னர் இடத்தட்டுப்பாடு காரணமாக கிடைத்த இடத்திலேயே
அடிப்படைவசதிகளை முடிந்தவரையிலும் அமைத்திருந்தார்கள். அந்த வகையிலே அம்மண்ணும் தன் மக்களின் தேவையை உணர்ந்து 6, 7 அடி ஆழத்திலேயே நீரைச் சுரத்தது.

இருவர் குளித்த பின் சில மணித்தியாலங்கள் காத்திருந்தால் அடுத்த குளிப்புக்கு நீர் சேர்ந்திருக்கும். இவ்வாறாகத் தண்ணீர் புகும் புற்றுக்குள் இருந்து வெளிக்கிளம்பும் எறும்புகளின் சுறுசுறுப்பும் கடமையுணர்வும் அவர்களிடம் தென்பட்டதே தவிர வாளாதிருந்து எவரும் மூக்குறுஞ்சிக் கிடக்கவில்லை. அப்படித்தான் அக்குறுகிய பகுதியிலே எம்மக்களும் வாழத்தலைப்பட்டுக்கொண்டிருந்தனர்.
இடையிடையே எங்களைத் தாண்டியும் எறிகணைகள் சென்று விழுந்துகொண்டிருந்தன. விசுவமடுவிற்கும் புதுக்குடியிருப்பிற்கும் இடையே எங்காவது அடுத்த கொட்டிலைப் போடலாம் என்ற கணிப்பிலே உடையார்கட்டை மனதில் நினைத்துக்கொண்டேன். இருமருங்கும் வயற்காற்று வீசும் சுகந்தமான அதன் வழமையான சுகத்தை அனுபவிக்கும் நிலையில் மனம் இருக்கவில்லை. அங்கு வந்துசேர மதியம் ஆகியிருந்தது. எனினும் அங்கு அறிந்தவர், உறவினர் என்று எவருமே இல்லை. அதாவது நிரந்தரவாசிகளாக குடியிருக்கவில்லை. உடையார்கட்டிலே எந்தப் பகுதி எறிகணைவீச்சு அச்சமில்லாத பகுதி என்று விசாரித்தபோது அனைவரும்
குறிப்பிட்டது சுதந்திரபுரத்தைத் தான்.

சிறீலங்கா அரசினால் பாதுகாப்புவலயமாக அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரம் உட்பட்ட சில பகுதிகள் திடீர்க்கிணறுக்கு உகந்த நிலப்பண்பினை கொண்டிராத மரநிழல்கள் அற்ற பகுதியெனினும், பாதுகாப்புக்கருதி அனைவரும் அக்குறுகிய பகுதிக்குள் எங்கேயாவது குந்திவிட முயன்றுகொண்டிருந்தனர். தலைவைக்கக்கூட இடமில்லாத அந்த நெரிசலைப் புளிக்கும் என கைவிட்டுவிட்டு அங்குமிங்குமாய் அலைந்ததில் நேரமும் இருட்டிவிட்டிருந்தது. ஓட்டோவிற்குள் அன்றைய இரவைக்கடத்திவிடலாமென ஓய்ந்த சற்றுநேரத்தில் பெயர் சொல்லி ஒரு குரல் அழைத்தது.

எங்களுக்கு ஒரு கிழமை முன்னரே இடம்பெயர்ந்துவந்த ஓரிருமுறை கண்டு கதைத்த ஒருவர் தங்கள் வீட்டிற்கு, மன்னிக்கவேண்டும் தரப்பாள்-கொட்டிலுக்கு அன்போடு அழைத்தார். அங்கே போனாம். எல்லாத் தரப்பாளுக்கு அருகிலும் பதுங்குகுழிகள்.

இப்படித்தான் வீதி, வயல்வெளி, வாய்க்காலடி, காடு என எந்தவோர் இடத்தையுமே தவிர்க்காமல் தங்கள் குடியிருப்புகளை எம்மவர்கள் அமைத்திருந்தனர்.  எல்லாவற்றையும் துறந்துவிட்டு இப்படி இடைநடுவில் வாழ்வதற்காகப் போராடிய அவர்களின் கண்களில் பிரகாசித்த உறுதியும், உழைப்பின் தீவிரமும், தாங்கும் திறனும் இவ்வுலகிற்கே ஒளிகாட்ட வல்லது. அப்படிப்பட்ட மக்களைக்கொண்டது எம்மினம் என நாம் ஒவ்வொருவருமே பெருமைப்படலாம்.

அடுத்தடுத்த நாட்கள் கொட்டில் போடுவதற்கு உசிதமான இடம் தேடுவதிலேயே பெரிதும் கழிந்தன. முல்லைவீதியில் எங்கேயாவது இடம் பார்க்கலாம் என்று இறங்கினால் ஒரு கிலோமீற்றரைக் கடப்பதற்கு 1-2 மணித்தியாலங்கள்வரை எடுத்தது. எங்கேயாவது சென்றுவிடுவதற்காக  வீதியில் இறங்கிய நிலையில் வன்னிவாழ் முழுத்தமிழினமும் கொதிக்கும் வெய்யிலில் அடுத்த கட்டத்திற்காக அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்தது. இடையிடையே பக்கவாட்டாகவும் தலைக்கு மேலாகத்
தாண்டியும் எறிகணைகள் தமிழர் உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருந்தன.

காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டுபோகும் வாகனங்கள்கூட எவ்வளவுதான் விட்டுக்கொடுப்பு இருந்தபோதிலும், ஒடுங்கிய வீதியின் அளவுக்கு மீறிய நெரிசலை எளிதிலே கடக்க முடியாமல் கஸ்ரப்பட்டுக்கொண்டிருந்தன. இப்படியான நிலையில் காயப்பட்டவர்கள் அவ்விடத்திற்கு அம்புலன்ஸ்-வாகனங்கள் சென்று ஏற்றிவருவது என்பது அவசரமாக சாத்தியப்படக் கூடியதாக யதார்த்தம் இருக்கவில்லை. ஆங்காங்கே உழவூர்திகள் வைத்திருப்பவர்கள் தேவையை உணர்ந்து
காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றிக்கொண்டு செல்வது வழமையாகியது.

குற்றுயிரான நிலையில் குருதி ஓடஓட உழவூர்திப்பெட்டிகளில் 20, 30 ஆகப் போட்டுக்கொண்டு நடுவெய்யிலுக்குள் தவிர்க்கமுடியாத வாகனநெரிசலை ஊடறுத்து அவசரமாகச் செல்ல முயற்சிக்கும் அந்தக் கணங்கள் கொடுமையானவை. அதற்குக் காரணமான எதிரியைப் போலவே அவனுடைய தமிழினம் மீதான காழ்ப்புணர்ச்சியும் இரக்கமோ மானிடநேயமோ சொட்டும் இல்லாததாக இருந்தது.

இதன் அடுத்தடுத்த வெளிப்பாடுகளாக உடையார்கட்டு வைத்தியசாலை மற்றும் ஐ.நா.வின் நிவாரணம் வழங்கப்பட்ட மயூரன் விளையாட்டுத்திடல் மீதான திட்டமிட்ட எறிகணைத்தாக்குதல்கள் அமைந்தன. எல்லாவற்றையும் இழந்துநின்றவர்களுக்கு ஐ.நா.வால் வழங்கமுடிந்த அற்ப உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்மீது, பொறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது 1700 பேர்வரையில் காயப்பட்டதாக அப்போது கேள்விப்பட்டோம். அதில் இறந்தவர்களின் தொகையும் மிக அதிகம். தண்ணீர் வசதிமற்றும் கூடியிருக்கும்போது கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு காரணமாக வாய்க்காலை ஒட்டித் தமது கொட்டில்களைப் போட்டிருந்த மக்கள் வைத்தியசாலையும் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்குட்பட்ட நிலையில் மீண்டும் அடுத்தகட்ட இடப்பெயர்வு நிர்ப்பந்தமானது. பிரதானமான ஒரேயொரு முல்லைவீதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்த மக்கள் தவிர சேதமானநிலையில் பாரவூர்திகள், உழவூர்திகள் என்பன நிறைந்துகாணப்பட்டன.

இப்படியிருக்க உடையார்கட்டின் இருட்டுமடுப்பகுதிக்குள் எவருமே எதிர்பாராததருணத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் இராணுவம் திடீரென நுழைந்ததனால், மாற்றுடை கூட எடுக்க அவகாசமின்றி ஓடிவந்த பலரின் அனுபவங்கள் பின்னர் காதுக்கெட்டின. தப்பிவர முடியாமல் அகப்பட்டவர்களில் கொல்லப்பட்டோர் தவிர மற்றையோர் பல அலைச்சல்களுக்குப் பின்னர் பல நாட்களுக்குப் பின் மன்னாருக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன்,

விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பி இராணுவத்தரப்பிடம் வந்தவர்களாகப் பிரச்சாரப்படுத்தப்பட்டனர். அடுத்தது வள்ளிபுனம் எமது தெரிவானது.

பதிவு இணையத்திற்காக
16-05-2020







No comments