தன்னார்வ குழுக்களை அனுமதிக்கவேண்டும்:சட்டத்தரணி குருபரன்


அரச இயந்திரம் இன்னும் முழுமையாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களை
சென்றடைய முடியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. எனின் தன்னார்வ குழுக்களை / நபர்களை செயற்பட அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல ஊக்குவிக்கவும் வேண்டும். முறையான கொள்கை ஒன்றின் ஊடாக இந்த தன்னார்வக் குழுக்களை திரட்டி வேலை செய்வதும் நல்ல ஆட்சியியல் பண்பாகும். அவ்வாறு செயற்படுபவர்களை பாதுகாப்பு துறையினர் தடுப்பது அல்லது தொந்தரவு செய்வது (முறையான ஊரடங்கு நேர போக்குவரத்து அனுமதி இருந்தவர்களுக்கும் கூட) விசித்திரமானது என யாழ்ப்பாண சட்டத்தரணி குருபரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தன்னார்வ குழுக்களின் நடவடிக்கைகள் இரட்டிப்பு இல்லாமல் வினைத்திறனாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு அவர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு தேவை. இதை உண்மையில் மாவட்ட செயலகம் செய்ய முன்வர வேண்டும்.
இந்த நேரத்தில் தான் மனிதாபிமான, அபிவிருத்தி, வாழ்வாதாரத்தில் முழு நேரப் பணியாற்றும் - தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - போன்ற அமைப்பிற்கான தேவை மீள உணரப்படுகின்றது.
அரசை எதிர்பார்த்து தமிழினம் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து விடக் கூடாது. பொதுவாகவே அரச இயந்திரம் இந்த நேரங்களில் துரிதமாக செயற்படுவதில்லை என்பதற்கும் மேலதிகமாக பேரிடர் காலங்களில் கூட பேரினவாத அரசியலை நாம் அனுபவித்து இருக்கிறோம் என்பதே வரலாறு. அந்த அனுபவத்தின் தொடர்ச்சி இம்முறை இல்லை என்றால் மகிழ்ச்சியே.
சட்டத்திற்கு உட்பட்ட, வெளிப்படையாக இயங்கும் அரச இயந்திரத்திற்கு நிகராக / சமாந்திரமாக மனிதாபிமான, அபிவிருத்தி, வாழ்வாதாரப் பணிகளை பெரியளவில் ஒருங்கிணைக்கக் கூடிய அமைப்புக்களை நாம் சமூக வெளியில் உருவாக்கிக் கொள்வது மிக மிக அவசியம். இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்ததன் பிற்பாடு இதற்கான பணிகளில் சமபந்தப்பட்டோர் உடனடியாக இறங்க வேண்டும்.

No comments