வடமராட்சி ஆதார வைத்தியசாலையினை காப்பாற்ற பகிரங்க அழைப்பு?


வடமராட்சி மக்களிற்கான மருத்துவ சேவையினை வழங்கிவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினை பாதுகாப்பதற்கு அனைவரும் அணிதிரள நெல்லியடி வர்த்தக சங்கம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் என்பவை பகிரங்க அழைப்பு விடுத்துள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சிவசிதம்பரம் மற்றும் நெல்லியடி வர்த்தக சங்கத்தின்  செயலாளர் இ.சுரேரஞ்சன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

நெல்லியடி வர்த்தக சங்கத்தின்  செயலாளர் இ.சுரேரஞ்சன் கருத்து தெரிவிக்கையில் இலங்கை முழுவதும் கொரோனா தடுப்பிற்கு வைத்தியசாலைகள் தோறும் முன்னெடுக்க வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அறிவக்கப்பட்டு ஆறு நாட்கள் தாண்டியும் ஏதுமே செய்யப்பட்டிருக்கவில்லை.இதனையடுத்து வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை தொடர்பு கொண்ட போது சில பொருட்கள் அதற்கு தேவையென தெரிவித்திருந்தார்.இதனையடுத்து பத்து இலட்சம் ஒதுக்கீடு செய்து மருத்துவ பொருட்கள் வாங்கும் வர்த்தக நிலையத்திற்கு சென்ற போது இரு தினங்களிற்கு முன்னராக அவை வைத்தியசாலையினால் கொள்வனவு செய்யப்பட்டுவிட்டமை கண்டறியப்பட்டது.

மந்திகை வைத்தியசாலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தாமதமாகவே நடைபெற்றுவருகின்றது.குறிப்பாக மாரடைப்பினால் பருத்தித்துறையினை சேர்ந்த ஒருவர் உயிரிழக்க அதனால் பெருங்குழப்பம் ஏற்பட்டிருந்தது.வைத்தியர்களை ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டிய வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் குழப்பங்களை ஏற்படுத்திவருகின்றார்.அன்று குறித்த மரணமடைந்தவரது சடலம் மாதிரி மதியத்தின் பின்னரே யாழுக்கு அனுப்பபட்டது.

ஆனால் அந்த தாமத்தினால் அன்று வைத்தியசாலைக்கு சென்றிருந்த 300 வரையான நோயாளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.சிகிச்சையளித்த வைத்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை உடனடியாக இடமாற்றம் செய்து வைத்தியசாலை பணிகளை சுமூகமடைய செய்யுமாறு கோருவதுடன் இவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் தொடர்புடைய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோருவதாகவும் தெரிவித்தார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளர் சிவசிதம்பரம் கருத்து தெரிவிக்கையில் வைத்தியசாலைக்கு வந்து சேர்கின்ற நிதியை நலன்புரி சங்கமே நிதி கையாள்கின்றது.அதற்கு என்ன நடக்கின்றதென்பதே தெரியாது.
வைத்தியசாலை கடந்த காலங்களில் நெருக்கடிகள் மத்தியில் சிறப்பாக செயற்பட்டது.அதிலும் யுத்த காலங்களில் குறைவான வைத்தியர்கள் வசதிகளுடன் பணிகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் நியமிக்கப்பட்டதன் பின்னராக இன்று எந்தவொரு முன்னேற்றமும் இல்லாதிருக்கின்றது.கணக்குகளில் வெளிப்படை தன்மை இன்மையின்மையால் எவரும் உதவ தயாராக இல்லை.

ஆனால் பலரும் உதவ தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தயாராக உள்ளனர்.

அண்மையில் 13 பேர் சத்திர சிகிச்சைக்கு வந்த போது மின் துண்டிப்பு காரணமாக சத்திர சிகிச்சை இரத்து செய்யப்பட்டது.மாற்று மின்பிறப்பாக்கி கூட திருத்தப்படாதுள்ளது.

கம்பரலிய நிதியில் வைத்தியசாலை வளவில் உள்ள ஆலய நிர்மாண வேலையில் கூட மோசடி நடைபெற்று பிரதேச செயலர் தடுத்து நிறுத்தினார்.

வடமராட்சியில் ஒரு இலட்சம் வரையிலான மக்கள் சிகிச்சை  பெறும் ஒரு வைத்தியசாலையாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உள்ளது.
நாம் வைத்தியசாலைக்கென வழங்கப்படும் மற்றும் கிடைக்கும் நிதிகள் தொடரப்pல் வெளிப்படை தன்மையை கோருகின்றோம்.

வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை இடமாற்றம் செய்து பொருத்தமான மருத்துவ அதிகாரியொருவரை நியமிப்பதன் மூலம் வைத்தியசாலைகயினை காப்பாற்ற அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மருத்துவ சங்கம் வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments