மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா?

சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மன்னரும், பட்டத்து இளவரசரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 16 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏழை, பணக்காரர் பேதமின்றி அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. உலக நாடுகளின் தலைவர்களும், அவர்களது உறவினர்களும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தீவிர சிகிச்சைக்கு பிறகு அதில் இருந்து மீண்டார். அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சவுதி மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஆகிய இருவரும் மருத்துவர்களின் ஆலோசனை படி தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு குடும்பத்தினர் மேலும் பலருக்கு தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு வருவதாக தலைநகர் ரியாத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.
இளவரசர்கள் பலரும் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் என்பதால், அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கும் என சொல்லப்படுகிறது. சவுதி அரேபியாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும், இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments