புலனாய்வு அடிப்படையிலேயே யாழ்.பல்கலைக்கழக ஆயுள்?


யாழ்பல்கலைக்கழக விவகாரங்களில் புலனாய்வு அறிக்கை அடிப்படையில் கொழும்பு செயற்படுகின்றதாவென சட்டத்தரணி குருபரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேராசிரியர் விக்கினேஸ்வரன் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் உயர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் 'தமிழமுதம்' என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டமை, தமிழ் அரசியல் கோரிக்கைகள் உள்ளடங்கிய நினைவு தூபி அமைக்கப்படுவதை தடுக்கத் தவறியமை ஆகியன தொடர்பில் இராணுவப் புலனாய்வு தனக்களித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறியிருந்ததனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை விசாரணை இன்றி தள்ளுபடி செய்தமை இலங்கை நீதித் துறையின் 'சுயாதீனத்திற்கு' அருமையான சான்று.

இதே பேராசிரியர் விக்கினேஸ்வரன் பல்கலைக்கழக பேரவையின் முதலாம் தெரிவை சனாதிபதி சிறிசேன நிராகரித்து இரண்டாம் தெரிவான பேராசிரியர் விக்கினேஸ்வரனை நியமித்த போது யாழ்.ஆயர் அது தொடர்பில் எழுப்பிய விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் போது முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவர் தொடர்பில் புலனாய்வு எதிர்மறையான அறிக்கை செய்திருந்ததாகவும் அதனாலேயே தனக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டதாகவும் இதே விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சியோடு குசலமாக இருந்த காரணத்தினால் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலனாய்வின் அழுத்தத்தில் பதவி வழங்கப்படாமைக்கோ அவ்வாறு வழங்கப்பட்டவர் அதே புலனாய்வால் பதவி நீக்கப்பட்டதற்கோ ஒரு மூச்சு கண்டனம் தானும் விடவில்லையெனவும் சட்டத்தரணி குருபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments