வெளியூர் இறக்குமதிகள் தமிழரசுக்குப் புதியதன்று! ஆரம்பமே அதுதான்! பனங்காட்டான்

தமிழரசுக் கட்சியின் ஆரம்ப காலமே முன்னாள் எம்.பி. டாக்டர் இ.எம்.வி. நாகநாதன், முன்னாள் அமைச்சர் முருகேசு திருச்செல்வம் போன்ற
தலைகளை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்ததுதான். இப்போது அதுபோன்று மேலும் தலைகளை வெளியூரிலிருந்து இறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை மறந்து திடீரென வெளியூர் இறக்குமதி வேண்டாம் என்று குரல் கொடுப்பவர்கள் தமிழரசின் கடந்த கால வரலாறை மறந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள்.

இலங்கையின் அடுத்த பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டாயிற்று. அடுத்த மாதம் (ஏப்ரல்) 25ம் திகதி. அதுவரையான நாட்களை தேர்தல் திருவிழாக்காலம் எனலாம்.

இந்த மாதம் 3ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அரசியலமைப்பு வழியாக நாடாளுமன்றம் அதன் ஐந்து ஆண்டு காலப்பகுதிக்குள் நான்கரை ஆண்டுகளை முடித்துவிட்டால், அதன் பின்னர் எப்போதும் அதனைக் கலைத்து புதிய தேர்தலைக் கோரும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியே கோதபாய ராஜபக்ச நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இல்லையேல் நாடாளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை செயற்பட்டிருக்கும்.

புதிய தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் இந்த மாதம் 12ம் திகதி முதல் 19ம் திகதிவரை ஏற்கப்படும். புதிய நாடாளுமன்றத் தொடர் மே மாதம் 14ம் திகதி ஆரம்பமாகும்.

எல்லாமே நேர்த்தியாகவும், சட்டப்படியாகவும் இடம்பெற்றால் மேற்சொன்ன திகதிகளில் மாற்றம் ஏற்படாது (கொரொனாவால் ஏதும் மாற்றம் ஏற்பட்டால் அது விதிவிலக்கானது).

இலங்கை நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களுள் 196 பேர் வாக்களிப்பின் மூலமும் 29 பேர் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவாவர். (பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட்டமைப்பின் சுமந்திரன் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினரானார் என்பது அனைவருக்கும் தெரியும்).

தற்போது தேர்தலைக் கோரியிருக்கும் ஜனாதிபதி கோதபாய நாடாளுமன்ற அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த வழியாகவும் ஒருமுறைகூட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்காதவர். இலங்கையின் முன்னைய சகல ஜனாதிபதிகளும் (ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதல் மைத்திரிபால வரை) நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டுமன்றி அமைச்சர்களாகவும், பிரமதர்களாகவும் பதவி வகித்து அரசியல் பாதையில் அனுபவம் பெற்றவர்கள்.

ராணுவ அதிகாரியாகவும், ராணுவத்துக்குப் பொறுப்பான பாதுகாப்புச் செயலாளராகவும் பதவி வகித்து, தமையனார் மகிந்த மீண்டும் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிட முடியாது தடுக்கப்பட்ட காரணத்தால் அந்தக் கதிரைக்கு மக்களால் தெரிவாகிய கோதபாய இப்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோரி நிற்கிறார்.

முதல் நூறு நாட்களுக்குள்ளேயே அரச நிர்வாக என்ஜினை மெதுமெதுவாக ராணுவ வழித்தடத்துக்கு ஓட்டிச் சென்று கொண்டிருக்கும் இவர், நாடாளுமன்றம் வாயிலாக முழுமையான ராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் சட்டங்களை உருவாக்கி தமது கரங்களைப் பலப்படுத்தவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருகிறார்.

அவரது விருப்பம் ஏப்ரல் 25ல் நிறைவேறுமானால் இனிமேல் நாடாளுமன்றத்துக்கு மட்டுமன்றி ஜனாதிபதி பதவிக்கும் தேர்தல் நடைபெறுமா என்பது பலத்த சந்தேகம்.

ஒருமுறை மட்டுமே ஜனாதிபதிப் பதவியில் இருப்பேன் என்ற கோதபாயவின் அண்மைய அறிவிப்பு, அவர் கூறும் ஒரேயொரு தடவை என்பது அவரது ஆயுட்காலம் வரையானது என்ற அர்த்தத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. அதுவே உண்மையானால் அவரது ஆயுட்காலம் முடியும்வரை இன்னொரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என்று கொள்ளலாம்.

இந்தத் தேர்தல் அறிவிப்பானது வேறு சில முக்கிய விடயங்களை அதனோடு இணைத்ததாக அதன் பக்கத்தே தொடுத்துள்ளது.

ராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான மனித மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமெரிக்கா விதித்த பயணத்தடை விவகாரம் திடீரென மங்கியதுபோல் காட்சியளிக்கிறது. ஆனால், அது உண்மையல்ல.

இந்தப் பயணத்தடையை கோதபாய தரப்பு சிங்கள பௌத்த வாக்குகளை தம்வசமாக்கி தேர்தல் வெற்றி வாய்ப்புக்கு நன்கு பயன்படுத்த தயாராகிறது.

ஒரு வகையாகப் பார்த்தால், கோதபாயவை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தவே அமெரிக்கா சவேந்திர சில்வா பயணத்தடையை ஏற்படுத்தியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

ஜெனிவாத் தீர்மானத்தின் இணைஅனுசரணையிலிருந்து இலங்கை அரசு தன்னை இப்போது விலத்திக் கொண்டுள்ளது. இலங்கையின் இறையாண்மைக்கும் உள்நாட்டுச் சட்டங்களுக்கும் இந்தத் தீர்மானம் விரோதமானது என்பது அரசின் வாதம்.

இணைஅனுசரணையிலிருந்து இலங்கை விலகினாலும் தீர்மானம் ரத்தாகாது என்று மனித உரிமை ஆணையாளர் அறிவித்துள்ளார். இது உண்மை. ஆனால், விலகிப்போன தரப்பை இழுத்து வந்து மீண்டும் அதனை இணங்க வைக்கும் அதிகாரம் அவருக்கும் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது.

இணைஅனுசரணையிலிருந்து வெளியேறியது இலங்கைக்குக் கிடைத்த பெருவெற்றியென்று அறைகூவியுள்ளார் ராஜபக்ச அணியின் முக்கிய புள்ளியான ஜி.எல்.பீரிஸ். இங்கு இவர் பெருவெற்றி எனக்குறிப்பிடுவது பொதுத்தேர்தலில் கிடைக்கப்போகும் வெற்றியையே.

சவேந்திர சில்வா மீதான தடையும், இணைஅனுசரணை விலகலும் சரியான நேரத்தில்  கோதபாய தரப்புக்குக் கிடைத்துள்ள நல்வாய்ப்புகள்.

ஏப்ரல் மாதத் தேர்தலின் பின்னர் சவேந்திர சில்வா ராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறக்கூடும். அப்போது அவர் மீதான பயணத்தடையும் காலவதியாகலாம்.

கொரொனா காரணமாக இம்மாதம் 13ம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஜெனிவா அமர்வுகூட சிலவேளை மீண்டும் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம் - யார் கண்டது?

சொல்லப்போனால், இலங்கையின் சகல மாவட்டங்களின் சந்தியிலும் சந்தையிலும் அடுத்து இரண்டு மாதங்களுக்கும் தேர்தலும் வெற்றி தோல்வியுமே பேசுபொருளாக இருக்கப் போகின்றன.

இந்தத் தேர்தலில் வடக்குக் கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 29 உறுப்பினர் தெரிவு செய்யப்படுவர். இது மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய எட்டில் ஒரு பங்கு.

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் முறையே 07, 06, 05, 07, 04 உறுப்பினர்கள் தெரிவாவர். இதற்கு முறையே 10, 09, 08, 10, 07 என மொத்தம் 42 வேட்பாளர்களை ஒவ்வோர் அணியும் சமர்ப்பிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் ஏழு உறுப்பினர்களைத் தெரிவதற்கு ஒவ்வொரு கட்சியும் அல்லது அணியும் பத்து வேட்பாளர்களின் பெயர்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்படிப் பார்க்கின் சம்பந்தனின் தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி., விஜயகலா மகேஸ்வரனின் ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஒவ்வொன்றும் தலா பத்துப் பெயர்களைச் சமர்பிப்பின், எல்லாமாக வரும் எண்பது தொண்ணூறு வேட்பாளர்களில் தெரிவாகப் போகும் ஏழு பேர் யார்?

தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போதுள்ள ஐந்து முன்னாள் எம்.பிக்களுடன் மேலும் ஐவரை பட்டியலிட வேண்டும். இவர்களுள் பெண்கள் எத்தனை இளையோர் எத்தனை என்ற கேள்வி எழுகிறது. மற்றைய அணியினருக்கு வேட்பாளர் தெரிவில் பெரும் பிரச்சனை ஏற்பட இடமில்லை.

ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே இது பிரச்சனை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடித் தெரிவான முன்னாள் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் கூட்டமைப்பில் போட்டியிட ஆர்வம் காட்டி அவர்களின் கூட்டம் ஒவ்வொன்றின் முன்வரிசையிலும் பிரசன்னமாகிறார். கடந்த வருட ஜெனிவா அமர்வுக்கு சிங்களத் தரப்பின் ஒருவராக சென்ற இவர், சில மாதங்களுக்கு முன்னர் லண்டன், கனடா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தமிழர் அரசியல் தீர்வைத் தவிர்த்து அபிவிருத்தி பற்றி மட்டுமே பேசி அதனை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி மகிழ்ந்த இவர் கூட்டமைப்பில் இடம் கேட்பது விந்தையானது.

இதிலுள்ள இன்னொரு விநோதம் என்னவெனில் இவரைச் சாடுவதாகக் கூறி விக்னேஸ்வரன் மீது சிலர் மந்திப்பாய்ச்சல் புரிவதுதான்.

வெளியூர் இறக்குமதிகள் தங்களுக்கு வேண்டாம் என்று கூறும் தமிழரசுப் பிரமுகர்கள் சுரேன் ராகவனுக்கூடாக விக்னேஸ்வரனை இலக்கு வைக்கிறார்கள். ஒரு விக்னேஸ்வரனை கொழும்பிலிருந்து இறக்கியதால் தாங்கள் பெற்ற அனுபவம் போதுமென்று அழுகிறார்கள்.

இவ்விடத்தில் இவர்களுக்கு சில விசயங்களை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. தமிழர் அரசியலில் தந்தை என மதிக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை ஆரம்பிக்கும்போது அதன் செயலாளராக நியமனமான டாக்டர் இ.எம்.வி.நாகநாதனை எங்கிருந்து கொண்டு வந்தார்? 1965ம் ஆண்டில் முதலில் செனட்டராகவும் பின்னர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட முருகேசு திருச்செல்வத்தை எங்கிருந்து கொண்டு வந்தார்?

யாழ்ப்பாணம், நல்லூர் தொகுதிகளின் தமிழரசு வேட்பாளராகப் போட்டியிட்ட டாக்டர் நாகநாதனை எங்கிருந்து இறக்கினார்? இவர்கள் கொழும்பின் ஷகறுவாக்காட்டுத் தமிழர்| என பெயர் பெற்றவர்கள்.

கொழும்பில் வளர்ந்து, றோயல் கல்லூரியில் படித்து, கொழும்பு சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராகப் பட்டம் பெற்று கொழும்பிலேயே சட்டவாளராகப் பணிபுரிந்த எம்.ஏ.சுமந்திரன் எவ்வாறு அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தமிழரசு எம்.பி.யாக்கப்பட்டார்?

திருமலையில் இப்போது தமிழரசுக் கட்சி வேட்பாளராகக் களமிறக்கப்படவுள்ள குகதாசன் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லையா? கொழும்பில் நீண்டகாலமாக சட்டவாளராகப் பணிபுரியும் தவராஜாவை தேசிய பட்டியல் ஊடாக எம்.பி.யாக்க முயற்சி எடுக்கப்படுகிறதே? இது இறக்குமதி இல்லையா?

இவர்களெல்லாம் வெளியூரிலிருந்து தாயகத்துக்கு தமிழரசுக் கட்சியாலும் அது தலைமை தாங்கும் கூட்டமைப்பாலும் அரசியலுக்கு இறக்கப்படுபவர்கள். இதனை மறந்து மக்களோடு மக்களாக நிற்கும் ஒருவரை இலக்கு வைத்து வெளியூர் இறக்குமதியென்று கூறுவது எவ்வாறு பொருந்தும்?

தமிழரசுக் கட்சியின் வரலாறே அதன் தலைமைப் பதவிகளுக்கு இறக்குமதிகள் அதிகமென்பதைக் காட்டும். இதனை மறந்து பொதுவாக எதிர்ப்பது போன்று மாற்றுத் தலைமையாக - நேற்றைய கொள்கையை ஏற்று, இன்று அரசியலை வழிநடத்தி, எதிர்கால சிந்தனையில் செயற்படும் விக்னேஸ்வரனை ஷவெளியூர் இறக்குமதி| எனக்கூறுவது எவ்வகையில் நியாயமானது?

No comments