உயிர்போகும் நிலைக்கு சந்தேக நபரை தாக்கிய யாழ் பொலிஸ்

யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் நேற்று (11) காலை யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டதாக நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர் (37-வயது) என்பவர் நேற்று காலை 11 மணியளவில் அரியாலைப் பகுதியில் வைத்து யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்து யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி பொலிஸ் நிலையம் சென்ற போது கணவன் தாக்கப்பட்டதை அவதானித்து யாழ் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து யாழ் மனித உரிமைகள் ஆணையாளர் சென்று பார்த்தபோது குறித்த சந்தேக நபர் உயிராபத்தான நிலையில் இருந்ததால் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸ் உயரதிகாரியை கோரினார்.

இருந்த போதிலும் பொலிஸ் அதிகாரி வைத்தியசாலை கொண்டு செல்ல மறுத்த நிலையில் ஒரு மணிநேர வாக்குவாதத்தின் பின்னரே தாக்கப்பட்ட சந்தேக நபர் அம்புலன்ஸ் ஊடாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

No comments