கோதபாயவின் அரசியலுக்கு கொரோனா ஒரு வரப்பிரசாதம் - பனங்காட்டான்

''கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்திக் காட்ட அவசரகாலநிலை, ஊரடங்குச் சட்டம், பதினான்கு நாள் கட்டாய
தனிமைப்படுத்தல் என்பவற்றை வீச்சாகச் செயற்படுத்தியுள்ள கோதபாய ராஜபக்ச மறுதரப்பில் மிருசுவில் எட்டுத் தமிழர் கொலையில் மரணதண்டனை பெற்ற ராணுவத்துக்கு விடுதலை, யுத்தகால விமானப்படைத் தளபதிக்கு மேல் மாகாண ஆளுனர் பதவி, சுவிசிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொரோனாவைப் பரப்பிய மதபோதகரைப் பாதுகாத்த பொலிசார்மீது நடவடிக்கையின்மை என்று தாம் விரும்புபவைகளை கச்சிதமாக மேற்கொண்டு வருகிறார்.''

எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் சீனாவில் பிரசவமான கோவிட் - 19 என்ற கொரோனா வைரசினால் உலகம் இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

அழையா விருந்தாளியாக ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் தாமாகப் புகுந்த கொரோனாவை சர்வதேச பயங்கரவாதியாக ஒவ்வொருவரும் பார்க்கின்றனர்.

சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று கூறப்பட்டதைப் போன்று கொரோனா எங்கும் எதிலும் இருக்குமென்கிறார்கள் உலகளாவிய மருத்துவர்கள்.

ஆனால், இதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் இதுவரை எந்த நாடும் - வல்லரசுகள்கூட வெற்றி பெற்றதாகவில்லை.

சீனாவில் இந்நோய்ப் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக செய்திகள் சொல்கின்றன. உலக சுகாதார நிறுவன அறிக்கையும் இதனையே சொல்கிறது. ஆனால், எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதென்பது மூடுமந்திரமாகவேயுள்ளது.

ஒருவருக்கொருவர் கைலாகு கொடுக்க வேண்டாம், சுடுநீரில் சவர்க்காரத்தால் கைகளை ஆகக்குறைந்தது 20 விநாடிகளாவது கழுவ வேண்டுமென்று ஆரம்ப கால மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன.

இதன்வழி ஆங்கில நடைமுறையில் கைலாகு கொடுப்பதைத் தவிர்த்து ஆசிய நாட்டு முறையில் கைகளைக் குவித்து வணக்கம் செலுத்திய இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் கொரோனா நோய்க்கு உட்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூட தம்மைச் சந்தித்தவர்களை கைகூப்பி வரவேற்று ஊடகங்களில் ஒளிப்படமானார். இதனை எங்கே பயின்றீர்கள் என்று சிலர் கேட்டபோது, தமது அண்மைய இந்திய விஜயத்தின்போது மக்கள் தமக்கு கைகூப்பி வணக்கம் செலுத்தினார்கள் என்று பதிலளித்தார்.

ஆரம்பத்தில் கொரோனா பற்றி அவரிடம் கேட்டபோது அதனை ஷஅரசியல் புரளி| என்று நையாண்டித்தனமாக பதிலளித்த அவரின் நியுயோர்க் நகரம் இப்போது கொரோனா நகரமாகியுள்ளது.

இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது. 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் இங்கு நோய் கோபம் கொள்ளுமானால் நிலைமை மோசமாகுமென்பதைத் தெரிந்து பிரதமர் மோடி எடுத்த தூரநோக்குள்ள நடவடிக்கை இது.

இந்நோய்ப் பரம்பலை தவிர்க்க ஒருவருக்கொருவர் இடையே ஆறு அடி (2 மீற்றர்) இருக்க வேண்டுமென்பதும், சமூக நடமாட்டம் தவிர்க்கப்பட வேண்டுமென்பதும், சட்டமாகாமல் சர்வதேசமும் பிரகடனமானது.

கனடியப் பிரதமர் தமது நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், ஷவீட்டுக்குள் செல்லுங்கள் - வீட்டுக்குள் இருங்கள்  (Go home - Stay home) என்று கேட்டுக் கொண்டார். வெளியில் நடமாடி நோயைப் பரப்ப வேண்டாம், உங்களையும் நோயாளிக்க வேண்டாமென்பதே இதன் அர்த்தம் (எத்தனை பேர் இதனைக் கேட்டு நடக்கிறார்கள் என்பது கேள்விக்குறி).

கனடியப் பிரதமர் கூறியதையே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஷவிழித்திரு - விலகியிரு - வீட்டிலிரு| என்று கருணாநிதி பாணியில் அடுக்கான அழகு தமிழில் வேண்டியுள்ளார். (அங்கும்கூட பெரும்பாலானவர்கள் இதற்குச் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை).

எவரதும் கண்களுக்குப் புலப்படாத கொரோனா வைரசின் தாக்கத்தையும் கடுமையான தார்ப்பரியத்தையும் பெரும்பான்மையான மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளாததையே இது புலப்படுத்துகிறது.

அரசாங்கங்கள் வழங்கும் சலுகைகளையும் நிவாரணங்களையும் எவ்வாறு பெறலாமென்பதில் இருக்கும் அக்கறையும் ஆர்வமும், நோய்ப்பரம்பலை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாமென்பதில் இனக்குழுமங்கள் இல்லைப்போல் தெரிகிறது.

இதனைத்தான் அரசியல்வாதிகளும் விரும்புகின்றனர். வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிப்பது என்ற பழமொழிபோல, பொதுமக்களின் வரிப்பணத்தையெடுத்து அரசாங்கம் வழங்குவது போன்று அவர்களுக்கே நிவாரணமாக வழங்குவது நெருக்கடி காலங்களில் எப்போதுமே அரசியலாக மாறிவிடும்.

இவ்விடயத்தில் வளர்ச்சியடைந்த நாடு, வளர்முக நாடு, மூன்றாம் உலக நாடு, வறுமைக்கோட்டுக்குள் கீழ் வாழும் நாடு என்ற வித்தியாசம் காணமுடியாது. சமரசம் உலாவும் இடம்; என்பது இதுதான் போலும்.

ஜனநாயகத்தின் பேரில் ராணுவ ஆட்சி நடத்தும் இலங்கை மட்டும் இதற்கு எவ்வாறு விதிவிலக்காக முடியும்?

ராணுவ அதிகாரியாகவும், ராணுவத்துக்குப் பொறுப்பான பாதுகாப்புச் செயலாளராகவும், யுத்த காலத்தில் எல்லாவாகவும் இருந்த கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சிபீடமேறிய நான்கு மாதங்களுக்குள் இப்படியொரு நல்வாய்ப்புக் கிடைக்குமென அவரே கனவு கண்டிருக்க மாட்டார்.

கொரோனா என்ற பெயரில் வந்த கொடிய நோய் இவருக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். தமது எதேச்சாதிகார ஆட்சியை வியாபித்து, தமக்குத் தேவையானவைகளை அறுவடை செய்ய இக்காலத்தை அவர் பயன்படுத்துவாரென்று முன்னர் இப்பத்தியில் கூறியதை மீண்டும் இங்கு வலியுறுத்த வேண்டியுள்ளது.

முதலில் இந்நோய்ப் பரம்பலைத் தடுக்க தாமதமற்ற செயற்பாடுகளை அதிரடியாக அவர் மேற்கொண்டார். ராணுவப் பின்னணியைக் கொண்டவர் என்ற வகையில் தாமதமின்றி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்தார் (இது இவருக்கு வாலாயமான ஒரு செயற்பாடு).

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களை அவரவர் வீடு செல்ல அனுமதிக்காது பதினான்கு நாட்கள் கட்டாயமாக தடுத்து வைத்திருக்கவென தனியான கட்டடங்களை அறிவித்தார்.  மட்டக்களப்பு, வவனியா, மன்னார்  என இவர் தெரிந்தெடுத்த இடங்கள் தமிழர் தாயக நிலப்பகுதிகள். இனவாத ரீதியாகவே இவ்விடங்களை இவர் தெரிவு செய்தாரென்ற தமிழ் அரசியல் பிரமுகர்களின் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.

சுவிற்சலாந்திலிருந்து யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட ஒரு மதபோதகரால் குடாநாடு இப்போது கொரோனா குடாவாக மாறியுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தொடர்கிறது. அரசியலும் ராணுவமும் கலந்த ஆட்சியில் நல்லவை என்ற தோற்றத்தில் சில அல்லவை அரங்கேறுகின்றன.

நாடாளுமன்றம் இல்லை. சட்டங்களும் திட்டங்களும் ஒருவரின் ஆளுமையில். அவரது உத்தரவுகளை நிறைவேற்றும் பிரதமர் மகிந்த அவரது சகோதரர். சாது போன்ற தோற்றத்துடன் இன்னொரு அமைச்சர் அவரது மூத்த சகோதரர் சாமல் ராஜபக்ச. சிங்கள பௌத்த ஏகாதிபத்திய ஆட்சிக்கு உறுதுணையாக இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்ச. இன்றைய இலங்கை அரசாட்சி, நீதித்துறை, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு - சர்வமும் ஒரு குடும்பத்துள்.

கொரோனா காலத்தில் கோதபாய மேற்கொண்ட ஓரிரு விடயங்களை மட்டும் பார்ப்போம்.

தமையனார் சாமல் ராஜபக்ச வசமிருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை தமது நிர்வாக அலகுக்குள் மாற்றிவிட்டார். ஏற்கனவே சாமல் வசமிருந்த பாதுகாப்புத் திணைக்களத்தையும் கோதபாய தம் வசமாக்கியது ஞாபகமிருக்கலாம்.

கொழும்பு, கம்பகா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தின் புதிய ஆளுனராக விமானப்படையின் முன்னாள் தளபதி றொசான் குணதிலகவை நியமித்துள்ளார். இலங்கையின் ஐந்தாவது விமானப்படைத் தளபதியாகவிருந்த கரி குணதிலகவின் மகன் இவர்.

முப்பது வருட பயங்கரவாதத்தை முறியடித்து முடிவுக்குக் கொண்டு வந்தவர் றொசான் குணதிலக என்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் புகழாராம் சூட்டப்பட்டவர் இவர்.

மிருசுவில் தமிழர் படுகொலைகள் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த ராணுவ சார்ஜன்ட் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் சில நாட்களுக்கு முன்னர் விடுதலை பெற்றுள்ளார். இதனை ஜனாதிபதி செயலகம் அறிவிக்கவில்லை. சிங்களே என்ற அமைப்பின் தலைவரான மெடில்லே பஞ்ஞாலோக தேரோவே இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

யுத்த காலத்தில் ஆற்றிய சேவைகளையும், சிறைக்கால நன்னடத்தையையும் கருத்தில் கொண்டு சுனில் ரட்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக இப்போது கூறப்படுகிறது. இந்தச் செயற்பாட்டை சர்வதேச மன்னிப்புச்சபை கண்டித்துள்ளது.

நான்கு சிறார் உட்பட எட்டுப்பேரை 2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி அப்போது ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சுனில் வெட்டிக் கொலை செய்ததற்கு நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனையை கொரோனா காலம் நல்லெண்ண விடுதலை செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவ காரணமாயிருந்த சுவிட்ஸ்லாந்தின் மதபோதகருக்கு யாழ்ப்பாணம் பொலிசாரே பாதுகாப்பளித்தனர் என்றும், இவரது மதபோதனையை தடுக்க முனைந்த யாழ்ப்பாணம் மருத்துவர் குழாம் பொலிசாரால் பயமுறுத்தப்பட்டதென்றும் வடமாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியின் கவனத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாவம் ஆளுனர் சார்ள்ஸ்! அவர் அனுப்பும் அறிக்கைகள் நேரடியாக குளிர்சாதன் பெட்டிக்குள்தான் போகுமென்பதை இனிமேல்தான் அவர் அறியக்கூடும்.

கொரோனா தொடரும்வரை கோதபாய ஆட்சிக்கு சுபகாலம். சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேர்ந்து ஒளியூட்டும் காலம். இதுவும் கடந்து இனியும் பல வரலாம்.

முடிவில், கொரோனாவுக்கு கோவிட் - 19 என்ற பெயர் எவ்வாறு வந்ததென்பதை பார்க்கலாம்.  Corana Virus Disease என்ற மூன்று சொற்களில் முதல் இரண்டு சொற்களின் முதலிரு எழுத்துகளும், மூன்றாவது வார்த்தையின் முதல் எழுத்தும் சேர்ந்து COVID என்றும், 2019ல் இது பரவ ஆரம்பித்ததால் சுருக்கமாக 19 என்றும் (கோவிட் - 19) பெயரிடப்பட்டதாக ஒரு கட்டுரையில் படித்ததுண்டு.

No comments