பள்ளிவாசலுக்குள் புத்தர்!?

மஹர சிறைச்சாலையில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றியுள்ளதாக கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அது குறித்து நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ரிஷாட் பதியுதீன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,

முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தும் இந்த இழிச்செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கோருகிறேன்.

இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றது. ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற இச்செயலானது கேலிக்குரியது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.

ராகம, மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டடத்தில், சில நாட்களுக்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் தனவந்தர் ஒருவரினால் நன்கொடை செய்யப்பட்ட காணியிலேயே இப்பள்ளிவாசல் இதுவரை காலமும் இயங்கி வந்துள்ளது.

ராகம பிரதேச முஸ்லிம்கள் இதனையே தமது தொழுகைக்காகப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்பள்ளிவாசலுக்கு மக்கள் தொழுகைக்காக வருவதைத் தடை செய்திருந்தனர்.

இதேவேளை, இப்பள்ளிவாசலைச் சுத்தம் செய்யவோ அல்லது அங்கிருந்து பொருட்களை எடுக்கவோ, எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த பள்ளிவாசல் கட்டடம், அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் புனரமைக்கப்பட்டு, ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளதுடன், உள்ளே புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments