கல்முனையில் குண்டு தாக்குதல்

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் இன்று (11) அதிகாலை 12.45 மணியளவில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தாக்குதலினால் பாதிப்புக்குள்ளான இடத்தில் தரித்து முச்சக்கர வண்டிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை - என்றனர்.

இத்தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பெரும் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான பகுதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பிரதேசத்தை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) மாலை இரு சமூகங்களை சேர்ந்த சிலர் இடையில் ஏற்பட்ட மோதல் ஒன்றினை அடுத்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த மோதல் சம்பவத்தில் கல்முனை பகுதியை சேர்ந்த 24 வயதிற்குட்பட்ட சுமதாச தம்மிக்க மற்றும் ஏகாம்பரம் யதுசன் ஆகிய இருவர் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாட்டிற்கு அமைய கல்முனை இஸ்லாமபாத் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ராஜா என்றழைக்கப்படும் பழில் மற்றும் அவரது மகனான ரொசான் (வயது-27) ஆகியோர் பொலிஸாரினால் ஞாயிறு மாலை கைது செய்யப்பட்டு நேற்று (10) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 1 இலட்சம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த தலைமையில் நேற்று (10) மதியம் இரு சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமார மற்றும் கல்முனை சுபத்திராராம விகாராதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருநதனர்.

No comments