தடம் மாறும் பேச்சுகள்! இடம் மாறும் தலைமைகள்! பனங்காட்டான்

கோதபாய அரசு தமிழர் பிரச்சனைத் தீர்வு, தமிழர் அரசியல் அபிலாசை, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்
என்ற அனைத்தையும் ஒரு கூடைக்குள் போட்டு மூடி கிடப்புக்குள் தள்ள முனைகிறது. ஆனால், தமிழர் தரப்பு தாயக மண்ணில் தடம்மாறும் பேச்சுகளுடனும் இடம்மாறும் தலைமைகளுடனும் தேர்தலை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. 

இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காண வெளியுலக தலையீட்டுடனான முதலாவது பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இன்னும் நான்கு மாதங்களில் 35 வருடங்கள் முடிவடையப் போகிறது.

இந்திய அரசின் முன்னெடுப்பில் பூட்டானின் திம்புவில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றதால் இதனை திம்புப் பேச்சுவார்த்தையென அழைப்பர்.

1985 யூலை மாதம் இலங்கை அரச தூதுக்குழுவும் தமிழர் தரப்பும் நடத்திய இப்பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து திம்புக் கோட்பாடு எனப்பெயரிட்டு பேச்சு வார்த்தை நடத்தியது.

இலங்கையின் அரச தரப்புக் குழுவில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சகோதரரும், பிரபல வழக்கறிஞருமான ஹெக்டர் ஜெயவர்த்தன தலைமையில் நான்கு வழக்கறிஞர்கள் பங்குபற்றினர்.

தமிழர் தரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈரோஸ், புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றனர். இவர்கள் முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகளையும் இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமானவை என்று இலங்கைக் குழு தெரிவித்ததோடு, அதேயாண்டு ஆகஸ்ட் 18ம் திகதி பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

முன்னைய பண்டா - செல்வா மற்றும் டட்லி - செல்வா ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட பின்னர், எழுதிக் கிழிக்கப்படாமல் முறித்தொழிக்கப்பட்ட பேச்சுவார்த்தை இது.

ஒன்றாக அமர்ந்து நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழரின் ஐந்து தரப்புகளும் பின்னர் பிளவுபட்டு தனித்தனியே தம்போக்கில் போராட்டம் நடத்தினவாயினும், இவை அனைத்தும் தத்தம் அளவுக்கு எட்டிய வகையில் திம்புக் கோட்பாட்டுக்குள் நின்றமை குறிப்பிடப்பட வேண்டியது.

திம்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரான அடுத்த கால் நூற்றாண்டானது, போராட்டமும் பேச்சுவார்த்தையுமென மாறி மாறிச் சென்று, தமிழ் மக்கள் சிங்களத் தரப்பாலும், சர்வதேசத் தரப்பாலும் ஏமாற்றப்பட்ட காலமாகவே சென்றது.

யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் ஒருபுறம், நோர்வேயின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் இடம்;பெற்ற ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இன்னொரு புறம்.

இவற்றுக்கு அப்பாற்பட்ட இன்னொரு புறமும் இலைமறை காயாக இருந்தது. அது, சகல பேச்சுவார்த்தைகளையும் குழப்பியடிப்பதற்கான பிரயத்தனங்களை இரவு பகலாக மேற்கொண்டு வெற்றி கண்டது. பிரித் ஓதிக் கொண்டு காவியுடைக்குள் இனவாத ஆயுதத்தை மறைத்து வைத்தவாறு இக்குழு தனது செயற்பாட்டை முன்னெடுத்து வெற்றி கண்டது.

எக்காலத்திலும் இவர்களே வெற்றி தரப்பாக அமைந்ததற்கு இவர்களின் காவியுடைகளே காரணம்.

நோர்வே என்பது உலகப் பொலிஸ்காரனின் இன்னொரு முகம் என்பதைத் தெரிந்து கொண்டு நம்ப நட என்ற கட்டுக்குள் நடந்த போதிலும், ஈழத்தமிழினம் தோல்வியே கண்டது.

மேற்சொன்ன கால் நூற்றாண்டும் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பது மீள்வாசிப்புக்குச் சொல்ல வேண்டியதன்று. அவை அனைத்துமே நினைவுச் சக்திக்கு உட்பட்டவை.

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் சிங்கள பௌத்த அரசு எல்லாவற்றையும் தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்தது. கைதுகள், சிறை அடைப்புகள், காணாமற் போகச் செய்தல், நீதி விசாரணைகள் மறுப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு என்பவை இக்காலகட்டத்தில் அரசாங்கத்தின் எதேச்சாதிகாரத் தன்மையை எடுத்துக்காட்டியது.

ஆளப்படும் இனமாக தங்களையும், ஆளப்படுவோராக தமிழ் மக்களையும் அரசாங்கம் தொடர விரும்பியது. இதற்கு ஏதுவாக முதற்தரப்பினரை பெரும்பான்மையினராகவும், அடுத்த தரப்பினரை சிறுபான்மையினராகவும் அடையாளம் காட்டியது.

ஆனால், முள்ளிவாய்க்கால் சின்னம் ஜெனிவா செல்லுமென அது அப்போது எண்ணியிருக்கவில்லை.

மனித உரிமை மீறல்கள், போர்க்கால படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர்கள், மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் என்ற அனைத்துமே ஒரு கைக்குள் அகப்பட்டன. பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உட்பட பல நாடுகள் அவ்வப்போது இவ்விவகாரத்தை ஜெனிவாவில் முன்னெடுத்தன.

இதில் புலம்பெயர்ந்த தமிழர்களினதும் அவர்களது அமைப்புகளினதும் செயற்பாடு முக்கியமானது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து உரையாடினர். ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு ஆதரவு கோரினர். ஆவணங்களைக் கையளித்தனர். உதவி வேண்டினர்,

ஜெனிவாவில் பல பக்க அமர்வுகளை நடத்தினர். வெளிக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. தற்கொடைகள்கூட இடம்பெற்றன. தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஜெனிவா புகுந்து தங்கள் பங்களிப்புகளையும் வழங்கினர்.

தமிழ் மண்ணை ஆக்கிரமித்து முகாமிட்டிருக்கும் ராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென கேட்கப்பட்டது. சூறையாடப்பட்டிருக்கும் தனியார் காணிகளை மீளளிக்குமாறு கேட்கப்பட்டது. வெளிப்பார்வைக்கு ஏதோ நடைபெறுவதுபோல காட்டப்பட்டதாயினும் செயலளவில் மட்டுப்பட்டதாகவே இருந்தது.

மனித உரிமைகள் ஆணையகத்தின் அடுத்த கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகி அடுத்த மாத இறுதியில் முடிவுபெறவுள்ளது. 2009ம் ஆண்டின் பின்னர் இங்கு படிப்படியாக முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் 2015ல் ஒரு திருப்புமுனைக்கு வந்தது.

அமெரிக்க கொண்டு வந்த 301 இலக்கத் தீர்மானத்துக்கு இலங்கை அரசு இணைஅனுசரணை வழங்கியது. யுத்தகால செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டுமென்பதையும், சர்வதேசத்தின் உதவியுடன் நீதி விசாரணை நடத்த வேண்டுமென்ற பொறிமுறையையும் இத்தீர்மானம் வலியுறுத்தியது.

ஆண்டுகள் ஐந்து முடியும் வேளையிலும் எதுவுமே நடைபெறவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனுசரணையுடன் கால நீடிப்பையும் அரசாங்கம் பெற்றது.

ஆனால், சர்வதேச விசாரணைப் பொறிமுறை இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமானது என்ற வாய்ப்பாடு இலங்கை அரசுக்கு வாலாயமானது. வெளிநாட்டுத் தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லையெனவும் கூறப்பட்டது.

முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல தடவை ஒன்றை மீண்டும் மீண்டும் கூற ஆரம்பித்தார். அமெரிக்காவுடன் இணைந்து தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த எதிர்ப்புகளுடன் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாதென்பதே இவர் கூறிய காரணம். இதனையே தற்போதைய ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவும் கூறி வருகிறார்.

பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்றனக்குறே ஆகிய ஐந்து கூட்டுக்குழு நாடுகளும் இவ்விடயத்தில் இலங்கைக்கு சாதகமாக இயங்கமாட்டாதென தெரிய வருகிறது. ஆனால், அமெரிக்கா சரியான முறையில் தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்காது காலத்தைக் கடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு சென்ற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுக்கு சில உறுதிமொழிகளை வழங்கியதாக செய்திகள் கூறுகின்றன. இலங்கை சொன்னதைச் செய்யத் தவறின் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களென கூட்டமைப்பு நம்புகின்றது.

இதே போன்ற நம்பிக்கையைத்தான் இந்த வாரம் இந்தியா சென்ற இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் இந்தியப் பிரதமர் மோடி ஏற்படுத்தினார்.

இந்திரா காந்தியில் இருந்து இன்றுவரை சகல இந்தியப் பிரதமர்களும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்குமாறு இலங்கை அரசிடம் கோருவதும், அவர்கள் ஆமா போடுவதுபோல தலையாட்டுவதும், பின்னர் அனைத்தையும் நிராகரிப்பதும் பழகிப்போன வழக்கம்.

ஜெனிவா இம்முறை பிழைக்குமானால் தமிழ்த் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கூத்தமைப்பு என்கிறார்கள். மாற்றுத் தலைமை வேண்டுமென்கிறார்கள்.

விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும்போது, தாமே மாற்றுத் தலைமை என்கிறார் கஜேந்திரகுமார்.

தமிழரசை தனியே விட்டு மற்றைய மூன்று குழுக்களையும் தங்கள் கூட்டுக்குள் வருமாறு அழைக்கிறார் சுரேஸ்பிரேமச்சந்திரன். இன்னும் சில காலத்தில் கூட்டமைப்பு தானாகவே அழிந்து விடுமென்கிறார் ரெலோவின் முன்னாள் பிரமுகர் சிறீகாந்தா.

கோதபாய அரசு தமிழர் பிரச்சனைத் தீர்வு, தமிழர் அரசியல் அபிலாசை, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்ற அனைத்தையும் ஒரு கூடைக்குள் போட்டு மூடி கிடப்புக்குள் தள்ள முனைகிறது. ஆனால், தமிழர் தரப்பு தாயக மண்ணில் தடம்மாறும் பேச்சுகளுடனும் இடம்மாறும் தலைமைகளுடனும் தேர்தலை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

No comments