ஐநா தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்

ஐநா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐநா வலியுறுத்த வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் ஐ.நா. தீர்மானங்களிலிருந்து வெளியுறுவது தொடர்பாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 26ம் திகதி இலங்கைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்து ஒதுக்கப்பட்ட நேரத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் செல்லும் தினேஸ் குணவர்தன குறித்த தீர்மானங்களில் இருந்து விலகுவதாக அறிவிக்கவுள்ளார்.

குறித்த தீர்மானங்களிலிருந்து இலங்கை விலகும் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றாகும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக நாம் அவதானித்து வருகின்றோம்.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களிலிருந்து இலங்கை வெளியேறும் நிலையில் எவ்வாறான விடயங்களை முன்வைப்பது என்பது குறித்து மத்திய குழுக் கூட்டத்தில் இன்று முடிவினை ஏகமனதாக எடுத்திருந்தோம்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் மீறுகின்றமையை தமிழரசுக் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை, இலங்கை குறித்த தீர்மானங்களிலிருந்து விலகினாலும் மனித உரிமைகள் பேரவையினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அது தவிர்ந்து வேறு வழிகளையும் கையாள வேண்டும் எனவும் கோருவதான தீர்மானத்தினை இன்று நாம் எடுத்துள்ளோம்.

இது தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானமாக மாத்திரமல்லாது பங்காளிக் கட்சிகளிடமும் குறித்த தீர்மானம் தெரியப்படுத்தப்பட்டு அவர்களும் அதனை ஏற்றுள்ளார்கள் - என்றார்.

No comments