குடும்ப கொலைகளது ஆவணங்களை சூறையாடினரா?


ராஜபக்ச குடும்பம் தொடர்பிலான வழக்குக்களது முக்கிய ஆவணங்கள் சுருட்டிச்செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த பொலிஸ் துறையை இராணுவ மயமாக்கி வருவதான  குற்றச்சாட்டின்  மத்தியில் பொலிஸ் துறையின் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) நடைபெறும் ஈஸ்ரர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்கவென தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தலைமையில் 6 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பபட்டு இருக்கிறது.

இந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள் ராஜபக்ச குடும்பம்  மற்றும் அவர்களின் நண்பர்கள் தொடர்புபட்ட 37 கொலை ,கடத்தல் வழக்குகள் தொடர்பான விசாரணை ஆவணங்களை குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இருந்து 25 ஆம் திகதி எடுத்து சென்று இருக்கிறார்கள் . இந்த ஆவணங்களில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஆவணங்கள் , பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை ஆவணங்கள் , பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு ஆவணங்கள் , 11 மாணவர்களை கடத்தி கப்பம் பெறும் நோக்கில் அவர்களை கொலை செய்தமை தொடர்பான ஆவணங்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

கோத்தபாயா ராஜபக்ச நியமித்த அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தரவின் பெயரிலேயே இந்த விசாரணை ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்வாறானதொரு அதிகாரம் கிடையாது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் உள்ள விசாரணை ஆவணங்களை பொலிஸ் மா அதிபரால் கூட அங்கிருந்து அகற்ற முடியாது. ஆனால் சட்டவிரோதமாக குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து இந்த ஆவணங்களை இராணுவத்தின் உதவியுடன் அகற்றி இருக்கிறார்கள். விசாரணை ஆவணங்களை அகற்றியதன் மூலம் இந்த 37 வழக்குகளையும் மிக சுலபமாக நிலைகுலைய செய்யலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments