தமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி


தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ  இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம் பெற்றுக்கொண்ட சலுகைகள், சுக போகங்களுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்புகள் காட்டாமலும் 'விலாங்கு மீன் பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுவது போல' செயற்பட்டு வந்துள்ளார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் புதிய கூட்டணியொன்றை அமைத்துள்ள நிலையில் அதனை இந்திய பின்னணி கொண்டதென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்திய அரசுகளது இலங்கை தொடர்பிலான போக்கினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கை அரசாங்கங்கள் சீனாவைப் பயன்படுத்தி பூச்சாண்டி காட்டி இந்திய அரசாங்கத்தை இலகுவாக ஏமாற்றி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமக்கு எதிராகத் தொடரும் இனஅழிப்பை நிறுத்தி எமது இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்குக் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்காமல் ஒரு சில கூற்றுக்களைக் கூறிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றமை எமக்கு ஏமாற்றம் அளிக்கின்றது.

ஐ. நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம்  2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த 30:1 தீர்மானத்தினை இன்னமும் நிறைவேற்றாத நிலையில், அதில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அது எடுத்துவருகின்றது.

இந்நிலையில், இந்தியாவின் ஆதரவினைத் தமக்கு அது சம்பந்தமாக பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சியாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அண்மைய விஜயம் அமைந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எம்மக்கள் மத்தியில் இருக்கின்றன.

மனித உரிமைகள் சபையின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து மனித உரிமைகள் சபையின் ஊடாக இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கைக்கு இருக்கும் பொறுப்பு கூறல் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா முன்னின்று செயற்படவேண்டும். வெறுமனே இலங்கையுடன் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக பொறுப்புக்கூறல் விடயத்தை இந்தியா பயன்படுத்தக் கூடாது. தமிழ் மக்களுக்கான நீதி, நிலையான தீர்வு என்பவற்றுக்கான ஒரு கருவியாகவே பொறுப்புக்கூறலை இந்தியா பயன்படுத்த வேண்டும்.இதுவே இந்தியாவுக்கு பல வழிகளிலும் அனுகூலமாக அமையும்.

இந்தியா எது செய்தாலும் இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவிற்கு விஸ்வாசமாக இருக்கப் போவதில்லை என்பதை இந்தியா உணர வேண்டும். எவ்வளவு தான் இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கினாலும் இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் இந்தியாவைத் தமிழர் சார்பான நாடாகவே பார்ப்பன. இந்தியாவின் பாதுகாப்பானது தென்கோடியில் இருக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது என்பதை கடந்தகால பட்டறிவிலிருந்து  இந்தியா உணர்ந்திருக்கும்  என்று நம்புகின்றேன். அதற்கேற்ப திரைமறைவில் நகர்வுகளை மேற்கொள்வர் என்பது எனது எண்ணப்பாடாகும் எனவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

No comments