தமிழர்களை வளைக்கத் தயாரானார் பசில்?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை புதிய அரசு பெரும் வகையில் புதிய வியூகங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச வகுத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி ஆளுங்கட்சியில் பங்காளிகளாக இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட வைக்கவும் அதன் பின்னர் அவர்களை அரசுடன் இணைக்கவும் ஆராயப்பட்டு வருகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதிகளவில் கிடைக்காததை கவனத்தில் கொண்டு இந்த புதிய வியூகத்தை பசில் ராஜபக்ச வகுத்திருப்பதாக தெரிகிறது.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது எழுந்துள்ள வேட்பாளர் நியமன சர்ச்சை, தேசியப் பட்டியல் நியமன இழுபறி போன்ற விவகாரங்களுக்கு இதன்மூலம் முடிவைக் காணலாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்டத் தலைவர்கள் கருதுவதாக மேலும் அறியமுடிந்தது.

இந்த யோசனை குறித்து ஆளுங்கட்சியின் பங்காளிகளாக இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments