அரைகம்பத்தில் தேசிய கொடி பறக்க விட்டு நியாயம் கேட்ட தொழிலாளி மகன்

நுவரெலியா - அக்கரப்பத்தனையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு தோட்டத் தொழிலாளி ஒருவரின் மகனான சுப்பையா சத்தியேந்திரா என்பவர் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

கிளாஸ்கோ தோட்ட மேற்பிரிவுக் குடியிருப்புப் பகுதியில் இன்று (04) காலை தேசியக் கொடி வைபவ ரீதியாக முழுக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அதன்பின்னர் கண்டனம் தெரிவித்து அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கம் உடனடியாக கவனஞ்செலுத்த வேண்டும் எனக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்நாடு 72 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்திருந்தாலும் கூட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் அடிமையாகவே இருக்கின்றனர். இவர்களுக்கான முறையான சம்பளம், உரிமை போன்றவை இன்னும் உரிய முறையில் கிடைக்கப்பெறாமல் பகடைக்காய்களாக வாழ்ந்து வருகின்றனர்.

மக்களை ஏமாற்றாமல் கூட்டு ஒப்பந்தத்தை இல்லாமல் ஆக்கி நாடாளுமன்றத்தில் இதற்கென ஒரு பொறிமுறையை உருவாக்கி அதனூடாக இவர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

ஓரிரு தொழிற் சங்கங்கள் மாத்திரம் இதனைப் பற்றிப் பேசாமல் சல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆகவே இனிவரும் காலங்களில் அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் இதற்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும் - என்றார்.

No comments