கேலி கிண்டலுக்கு ஆளான சிறுவனுக்கு குவியும் ஆதரவு!

கடந்த சில தினங்களாக இணையத்தை ஆக்கிரமித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் குவாடனின் வீடியோதான். 9 வயது சிறுவனான குவாடனின் அந்த வீடியோ மற்றவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஒருவர் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியது மட்டுமின்றி அதனைப் பார்ப்பவர்களையும் உலுக்கியது.
Achondroplasia எனப்படும் வளர்ச்சி குறைபாடால் பாதிக்கப்பட்ட குவாடன் சக மாணவர்களின் கிண்டலால் மனமுடைந்து, தனது தாயிடம், "எனக்குக் கத்தி கொடுங்கள், நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்” என்று வெதும்பி அழும் வீடியோ நெட்டிசன்களால் அதிகளவு பகிரப்பட்டது.
இந்தநிலையில் உலகம் முழுவதிலும் இருந்து குவாடனுக்கு, ஆறுதலும் ஆதரவு கரங்களும் நீண்டுள்ளது, சமூக வலைதளங்களில் #iStandWithQuaden என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. திரை பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும், குவாடனுக்கு வளர்ச்சி குறைபாடு எல்லாம் ஒரு குறையே இல்லை என்று நம்பிக்கை கொடுத்து வருகின்றனர்.
National Rugby League-ல் பங்கேற்கும் ஆஸ்திரேலியா வீரர்கள் குவாடனுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில், நீ (குவாடன்) இப்போது கடினமான நேரத்தில் இருக்கிறாய். நாங்கள் எல்லாம் உன்னுடன் இருக்கிறோம். நீயும் பலசாலிதான்” என்று தெரிவித்துள்ளனர்.
இதோடு மட்டுமின்றி விளையாட்டு மைதானத்துக்கு குவாடனை அழைத்துச் சென்று கவுரவித்துள்ளனர். மைதானத்தில் ரக்பி அணியின் கேப்டன் குவாடனின் கையை பிடித்து முன்னே செல்ல வீர்ர்கள் அனைவரும் சிறுவனின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். பின்னர் குவாடனின் கையால் பந்தைப் பெற்று கவுரப்படுத்தினர்.
இதுபோன்று ஆதரவு பெருகி வரும் நிலையில், சிறுவனுக்கு இருக்கும் அதே பாதிப்பை எதிர்கொண்டு வரும் அமெரிக்க ஸ்டாண்ட் அப் காமெடி நடிகரான ப்ராட் வில்லியம்ஸ், குவாடனுக்காக நிதி திரட்டி வருகிறார். இதன் மூலம் குவாடனையும் அவரது தாயையும் டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
அதுபோன்று, ஆஸ்திரேலியாவின் பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஹக் ஜாக்மேன், “நானும் உன் நண்பன் தான். என்னுடைய ரசிகர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். சிறுவனுக்கு ஆதரவு கரங்கள் அதிகரித்துள்ள நிலையில். ட்விட்டரில் #StopBullying என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குவாடன் தாயார் யாரகா பேலஸ், “எனது மகன் வாழ்க்கையில் மோசமான நாளையும் சந்தித்துவிட்டான். தற்போது வாழ்க்கையில் மிகச் சிறந்த நாளையும் சந்தித்துவிட்டான். இந்த வீடியோவைத் தொடர்ந்து பலரும் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

-கவிபிரியா

No comments