ஆயிரம் ரூபாய் ஒப்பந்தம் ஒத்திவைப்பு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கும் உடன்படிக்கையை நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கம்பனிகள், தொழிற்சங்கங்கள், அரச தரப்பு என முத்தரப்பினர் இணைந்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவிருந்தன.

எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தொண்டமான் ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்ததால், இந்த விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்தே இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத இறுதிக்குள் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்பதுடன், மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயம் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படுமெனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments