ஞாரே எழுத்திய ''உழவே உலை ஆளும் தொழில்''

நித்தமும் உழவே அவன் நினைப்பு

நீர் சூழ் உலகினில் அதுவே அவன் பிழைப்பு


நெற்றி வியர்வை சிந்திட அவன் உழைப்பு

சுற்றும் உலகை காப்பதே  அவனின் முனைப்பு



காளைகளை அன்போடு விரைந்து ஓட்டி

கருக்கல் பொழுதையும் அவன் முந்தி

காடு களணியை கணப்பொழுதில் திருத்தி

கடின உழைப்பால் உயர்வான் உழவன்



சோவென கடும் மழை பொழிந்தாலும்

தீயென வெப்பம் அவனைச் சபித்தாலும்

ஓவென அழாதும்  ஓடியும் ஒழியாதும்

சாவென சாகாது பிறவுயிர்களுக்காய் உழைப்பான்



தல மழை தரை தொடவே ஏரைப் பூட்டி

நில மகளை தொழுதே உரம்  ஊட்டி

குல தெய்வத்துக்கோர் படையல் காட்டி

பல கனவோடு வலம் வருவான் உழவன்



நீரை தேக்கி நல் சகதியை கலக்கி

ஏரை ஆழ உழுதே மண்வாசம் நுகர்ந்து

ஊரை சேர்த்து உழவை பெருக்கி

காரை நம்பி கைதொழுவான் உழவன்



கரு கொள்ளும் நிலமகளுக்கு பிரவசம் பார்ப்பான்

உரு கொள்ளும் மழலைப் பயிரை முத்தமிடுவான்

எரு இட்டு நீரை பாய்ச்சி மகிழ்வான்

இரு வேளையும் வயலோடு வாழ்வான்



பயிர் வளர்ந்து வரம்பைத் தொடும்

உயிர் ஒன்று இங்கே உவகை கொள்ளும்

பனி விலக்கி நெற்பயிர் தலை தடவி

இனி வாழ்வில் வசந்தம் கொள்வான்



பருவமடையும் பயிர் மகளை பார்த்தே

புருவம் உயர்த்தி அகம் மகிழ்ந்து

இருளும் விலகும் வறுமையும் ஒழியுமென்று

அருளும் நில அன்னையை தொழுவான்



வரம்பு மீறி உயர்ந்த செங் கதிரை

வரையறை இன்றி காதல் கொள்வான்

முற்றிய நெற்கதிரின் வாசம் நாசி புக

நெற்றி வியர்வையின் பயனை அடைவான்



நிலவொளியில் கதிரெல்லாம் பொன்னாக ஒளிரும்

நிலக்காற்றில் அசைந்தாடி கலகலவென சிரிக்கும்

நிரை நிரையாய் கதைபேசும் கதிர் கண்டு

நிம்மதி மூச்செறிந்து மட்டற்று மகிழ்வான்



அறுவடைக்கு நல்ல நாள் கணித்து

உறவுகளை அழைத்து குதுகலமாய் அறுத்து

வீடுமனை பெருக்கி விதவிதமாக அடுக்கி

வீறுநடை போட்டு ஆனந்தம் கொள்வான்



அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கென

ஆதி காலம் தொட்டே அவன் பேணிய வழக்கம்

கலி காலம் வந்து அழித்ததை நாம் தடுத்தோமா!

கிலி கொண்டு அனைத்தையும் நாம் அழித்தோமே!



உழவுக்கு தன் உடல் கொடுத்து

உலக உயிர்க்கு எல்லாம் உணவளித்து

உலகை காக்கும் கடவுள் உழவன்

உழவனின் கண்ணில் நீர் வழிய அனுமதிக்கலாமா!



உழவன் கலங்கி விசும்பி நின்றால்

உலகு அழிவை அண்மித்தது என அறி

உழவை மறந்து நீ சென்றால்

உந்தன் பரம்பரை கருகிவிடும் தெளி



உழவனுக்கு நாம்  கை கொடுக்போம்

அவன் கரங்களை ஆரோக்கியமாக வலுப்படுத்துவோம்

உழவும் ஏருமே உலகை ஆளும் தொழில்

உழவனை வணங்குவோம் உழவை  பின்பற்றிடுவோம்



ஞாரே

No comments