அமெரிக்கப் படையினரை இலக்கு வைத்து உந்துகணைத் தாக்குதல்கள்! 4 ஈராக்கியப் படையினர் காயம்!


ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஈராக்கிய விமானத் தளமான அல் பலாட்டில் உள்ள அமொிக்கப் படையினரை இலக்கு வைத்து உந்துகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆறு உந்துகணைகள் ஏவப்பட்டன. இந்த உந்துகணைத் தாக்குதலில் நான்கு ஈராக்கியப் பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமான நிலையத்தில் அமெரிக்கப் படையினர், போர்ப் பயிற்சி ஆசிரியர்கள், ஆலோசகர்கள் மற்றும் எஃவ்-16 ரக போர் விமான பாராமரிப்பு சேவையை வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருக்கின்றனர்.

ஏவப்பட்ட உந்துகணைகளில் சில விமான நிலையத்தினுள் வீழ்ந்து வெடித்துள்ளன. விமான நிலையத்தினுள் இருக்கும் உணவகத்தினுள் ஒரு உந்துகணை வெடித்துச் சிதறியுள்ளது. சில உந்துகணைகள் விமான ஓடுபாதையில் வீழ்ந்து வெடித்துள்ளது. மற்றொன்று விமான நிலைய வாசல் கதவைத் தாக்கியுள்ளது என ஈராக் காவல்துறை அதிகாரியான கேணல் முகமது கலீல் சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய வாயிலில் காவலில் இருந்த மூன்று ஈராக்கியப் படையினரும், விமான நிலையக் காவலாளி ஒருவரும் காயமடைந்தனர் கலீல் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேநேரம் குறித்த விமான நிலையத்திலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ஏ.எஃப்.பி செய்தியை மேற்கோள்காட்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments