பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்களைகளின் நினைவேந்தல்

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (26.01.2020) ஞாயிற்றுக்கிழமை பகல் 15.00 மணிக்கு பரிசின்
புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடரினை திரான்சி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கணேஸ் தம்பையா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து, மாவீரர்களின் திரு உருவப் படங்களுக்கான ஈகைச்சுடரினை 03.07.1988 அன்று விசுவமடு பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப்ரினன்ட் மரியா அவர்களின் சகோதரனும், 20.06.1990 அன்று காரைநகர்ப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை ரவி அவர்களின் சகோதரியும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து 22.04.2002 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் ஆதவன் அவர்களின் சகோதரியும் 02.04.2000 அன்று இத்தாவில் பளைப் பகுதியில் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப். காண்டீபன் அவர்களின் சகோதரி ஆகியோர் மலர்வணக்கம் செலுத்தினர்.


அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

அரங்க நிகழ்வுகளாக கரோக்கி இசையுடன் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள். தமிழ்ச் சோலை மாணவிகளின் விடுதலைப் பாடல்களுக்கான நடனங்களும், கேணல் கிட்டு நினைவு சுமந்த கவிதை என்பன இடம்பெற்றன. கரோக்கி இசைப்பாடல்களை  தமிழ்ச்சோலை மாணவர்களும் தமிழர்கலைபண்பாட்டுக்கழக பாடகர்களும் பாடியிருந்தனர்.

நடனங்களை புளோமினில் தமிழ்ச்சோலை, திரான்சி தமிழ்ச்சோலை, பொபினி தமிழ்ச்சோலை ஆகியவற்றின் மாணவர்கள் நடாத்தியிருந்தனர்.

திரான்சி மாநகரசபையின் துணைநகரபிதாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஆசிரியர் திரு.தசரதன் அவர்கள், எமது தமிழீழ விடுதலைப்போரிலே தங்களை அர்ப்பணித்த மூத்த விடுதலைப் போராளிகளைப் பற்றி இந்த இடத்திலே நாங்கள் நினைவுகொள்ளவேண்டும்.


காரணம் எத்தனையோ போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், எமது ஆயுதப்போராட்டம் 35 ஆண்டுகள் நீண்டு வளர்ந்திருக்கின்றதென்றால், எங்களின் மூத்த போராளிகளின் அர்ப்பணிப்பு, சிறந்த மண்பற்று, நாட்டுப்பற்று, மக்கள் தேசிய இனத்தின் பற்று போன்றவை தான் எமது நீண்ட நெடிய போராட்டத்தைக் கொண்டு சென்றது என்று தொடர்ந்த அவர், நாங்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்திடம் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகுறித்து கேள்விகேட்டுக்கொண்டே இருக்கவேண்டும், அது எமக்கான விடுதலையையும் நீதியையும் பெற்றுக்கொடுக்கும்.

என்றைக்கு இந்த சர்வதேசம் இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்புத்தான் என்று ஒத்தக்கொள்கின்றதோ அன்று எமக்கான நீதி கிடைக்கும் தமிழீழ தேசத்திற்கான விடுதலை கிடைக்கும் அப்போது, எமது நாட்டுக்காக வீரகாவியமான பல்லாயிரம் மாவீரர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்பவேண்டும் என்றார்.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் படல் ஒலிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.No comments