ஜனநாயக ரீதியில் போராடுவோம்

ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகளது திருகோணமலை மாவட்ட சங்கத்தினர் தெரிவித்தனர்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளது திருகோணமலை மாவட்ட சங்கத்தினர் இன்று (10) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது கடந்த மாதம் 29ம் திகதியுடன் 1000 நாட்களை கடந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று சர்வதேசத்திற்கும் நாட்டின் புதிய ஜனாதிபதிக்கும் தமது நிலைமைகளை வெளிப்படுத்துவதற்காக குறித்த செய்தியாளார் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக திருகோணமலை மாவட்ட சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமது உறவுகளது நிலைமைகள் தொடர்பாக புதிய ஜனாதிபதியின் பொறிமுறை எவ்வாறு அமையப்போகின்றது எனும் எதிர்பார்ப்புடன் தாம் இருப்பதாக தெரிவித்தார்.
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பதற்கான நீதியான பதிலை ஜனாதிபதி பெற்றுத்தர வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதுடன், தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கி போராடிய தாங்கள் இனிவரும் காலங்களில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

No comments