டக்ளஸை எதிர்த்ததால் தாக்கப்பட்டார் காணாமல் ஆக்கப்பட்டோர் இணைப்பாளர்

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக காணாமல் ஆக்கபட்டோரின் வவுனியா மாவட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (30) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் அவருக்கு எதிரான வசனம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்தனர். அத்துடன் அதற்கு சாணி வீசி, விளக்குமாறு மற்றும் செருப்பால் அடித்து கோசம் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், ஈபிடிபி ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தல் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். இதனையடுத்து குறித்த பகுதியில் நின்றிருந்த சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சூசை பிள்ளையார் குளம் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற குறித்த நபர்கள் அவரை வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அத்துடன் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments