பண்டாரவின் அறிவு அவ்வளவு தான்; சுமந்திரன் காட்டம்

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனுக்கு அரசியல் அமைப்பு தெரியாது எனவும் அவரது அறிவு அவ்வளவே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “தேசிய கீதம் இசைப்பது என்பது சிறு விடயம். அதனை பெரிதுபடுத்தக்கூடிய விடயம் இல்லை. ஆனால் அது மனநிலையின் அறிகுறியாக இருக்கின்றது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனுக்கு அரசியல் யாப்பு தெரியாது. அது என்ன சொல்கின்றது என்பது தெரியாது. ஆங்கில பத்திரிகையொன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டிருந்தபோது அரசியல் அமைப்பு சட்டத்திலே தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும்தான் உள்ளது என கூறியுள்ளார். அவ்வளவுதான் அவருடைய அறிவு.
13ஆவது திருத்தத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது அவருக்குத் தெரியாது. 16ஆவது திருத்தத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதும் அவருக்குத் தெரியாது. மொழி உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தினை அவர் வாசித்தது கிடையாது.
இந்த திருத்தத்திற்கு முன்னதாக 1978ஆம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டபோது அது சிங்களத்திலும் தமிழிலும் உருவாக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது. இரு மொழியிலும் அரசியல் அமைப்பு உருவாக்கபபட்டபோது அதில் எது மேலோங்கும் என்பதும் கிடையாது. இரண்டுக்கும் சம அந்தஸ்து இருக்கின்றது.
எங்களைப் பொறுத்தவரையில் தேசியக் கொடியாக இருக்கட்டும் தேசிய கீதமாக இருக்கட்டும் நாங்கள் இன்னும் இந்த நாட்டின் தேசிய வாழ்க்கைக்குள் உள்வாங்கப்படவில்லை என்பதே உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments