காணாமல் போனோர் எங்கெங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனரோ?


கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் எதிர்வரும் 30ம் திகதி காலை 10.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

குறித்த கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

காணாமல்போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியுமே தவிர அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 16.12.2019 அன்று தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிறீலங்கா இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என சர்வதேசத்திடம் நீதி கோரியும் மேற்கொள்ளப்படும் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு எமது தமிழ் மக்கள் கூட்டணி அதன் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றது. 

போரில் இறந்தவர்கள் வேறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேறு. ஒருவர் கைது செய்யப்படால் அவருக்கு என்ன நடந்தது என்று கூற வேண்டிய கடப்பாடு கைது செய்தவருக்கு உண்டு. ஒருவர் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் அவருக்கு என்ன நடந்தது என்று கண்டறிந்து கூறும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு. 

ஒருவர் அரச படையினரிடம் கையளிக்கப்பட்டு அவரை அவர்கள் என்ன செய்தார்கள் என்று அரச படைகளோ அரசாங்கமோ கூறாவிட்டால் அது மாபெரும் கண்டிக்கத்தக்க குற்றமாகும். அந்தக் குற்றத்தை செய்த அரச படைகளோ, அரசாங்கமோ தமக்குத் தெரியாதென்று கூறித் தப்பித்துவிட முடியாது. 
சில காலத்திற்கு முன்னர் சுமார் 20 வருடங்கள் கழிந்து அரச படையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் தெற்கிலிருந்து வடமாகாணம் வந்து சேர்ந்தார். இவ்வாறு எங்கெங்கே யார் யார் வெளி உலகத்துடன் தொடர்பின்றி வைத்திருக்கப்பட்டுள்ளார்களோ நாம் அறியோம். ஆகவே நம்பத்தகுந்த விசாரணைகள் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. விசாரணை இன்றி மரண சான்றிதழ்களை வழங்குவது பிழையான நடைமுறையாகும். ஒவ்வொரு காரணம் தெரியாத இறப்புக்கும் மரண விசாரணை செய்ய வேண்டியது சட்டமாகும். அவ்வாறான விசாரணையின் பின்னரே காரணம் அறிந்தபின் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments