அருட்தந்தையை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்

மன்னார் தோட்டவெளி பகுதியில் அருட்தந்தை மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி உயிலங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் வவுனியாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் இன்றி தென் பகுதி அரசியல்வாதிகளின் அனுமதிப்பத்திரங்களை மீன் வளப்புக்கென கையில் வைத்து மண் அகழ்வில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனரென கூறப்பட்டது.
அதற்கு அக்கிராம மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை மண்ணகழ்வு இடம்பெற்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது பங்குத்தந்தை குறித்த பகுதிக்குச் சென்றிருந்தார். அங்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய சிறு குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மண் அகழ்வு செய்தவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதோடு, பங்குத்தந்தையையும் தாக்கிய காணொளி ஊடகங்களில் வெளியானது.
இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையிலேயே, குறித்த பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

No comments