சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல்; பொய்! கண்டுபிடித்த ஜனாதிபதி

சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் உண்மையற்றது என்பது இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (03) மாலை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார். இதன்போது இந்த சர்ச்சை தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி,

சிசிடிவி காணொளி பதிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் சம்பவ தினத்தன்று குறிப்பிட்ட பெண் ஊழியர் அலுவலகம் அருகில் வாடகை வாகனம் ஒன்றில் புறப்பட்டுச் சென்று, பம்பலப்பிட்டியில் நேரத்தைக் கழித்த பின்னர் மாளிகாகந்த பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வாடகை கார் மூலம் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

வாடகை கார் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் செயலி (அப்ஸ்) மூலம் அது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில விபரங்கள் தொழில்நுட்ப ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் யாராவது இருந்து செயற்பட்டார்களா? அல்லது தனிப்பட்ட பிரச்சினையா? என்பதை ஊழியரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

சட்டமும் நீதியும் தனது கடமையை செய்யும். நாட்டுக்கு ஏற்பட்ட அவப் பெயரை நீக்கி உண்மையை வெளிக்கொணர எமது அரசு தயங்காது - என்றார்.

No comments