பறிபோகின்றது மைத்திரியின் 800 கோடி மாளிகை?


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திவரும் அதிசொகுசுவாய்ந்த உத்தியோகபூர்வ இல்லம், பறிபோகும் வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 07, பெஜட் வீதியில் அமைந்துள்ள இந்த உத்தியோகபூர்வ வீடானது, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்ட பின்னர், மூன்று உத்தியோகபூர்வ இல்லங்கள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அதி சொகுசு மாளிகையாகும்.

அதேபோன்று, ஜனாதிபதியொருவரின் பாவனைக்காகவே, பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டு, அதிக வசதிகளுடன் இவ்வீடு புனரமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலத்தின் போது பயன்படுத்திய இந்த வீட்டையே, தனது ஓய்வின் பின்னரும் பயன்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதியை, தனது பதவிக் காலத்தின் இறுதி மாதத்தில் பெற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும், இந்த அமைச்சரவை அனுமதியானது, உரிய முறையில் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் அதனால் அதன் ஏற்புநிலை குறித்துப் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஓய்வுபெற்ற ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகளுடனான தனியொரு உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரிபாலவுக்கு வழங்கிவிட்டு, மேற்படி அதி சொகுசு வீட்டை, அரசாங்கத்தின் வேறு உத்தியோகபூர்வ விடயங்களுக்குப் பயன்படுத்துவதென, அரசாங்கத் தரப்பின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments