இந்தியாவை நம்புங்கள்:ஈழம் கிடைக்கும்-சம்பந்தன்?


தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
“அரசியல் தீர்வுகளுக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து, அரசியல் தீர்வு சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. வாய்ப்புகளைப் பார்த்து நாம் ஒருபோதும்  அரசியல் தீர்வைத் தேடிப்போவதில்லை.தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயல்வோம். அதனை எவராலும் தடுக்க முடியாது.
சிங்கள மக்கள், தமிழ் மக்களின் தீர்வுக்கு எதிரானவர்கள் இல்லை. சிங்கள மக்களின் விரும்பமின்றி தமிழ் மக்களின் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
சிங்கள மக்களைப்போல தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை வழங்கினால் தான், நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். அரசியல் அதிகாரப் பகிர்வினூடாகவே உலகில் உள்ள அனைத்து மக்களும், சமமாகவும், சமாதானமாகவும் வாழ்கிறார்கள். இது இலங்கைக்கு புதிமையான விடயமல்ல. சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மைத் தலைவர்கள் உண்மையைக் கூற வேண்டிய காலம் விரைவில் வரும்.
இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்காக, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் எப்போதும் உதவத் தயாராகவே இருக்கிறோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல தடவைகள் அவருடன் கலந்துரையாடி உள்ளோம். இந்தியாவுக்குச் சென்று நாம் பிரதமருடன் கலந்துரையாட உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவோம்.
ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில தினங்களுக்குள்ளாகவே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டுமெனவும், அதற்கான அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கூறியிருந்தார்.
தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகள் 70 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
எ​திர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்குக்கு அப்பால் சில மாவட்டங்களிலும் போட்டியிடும். மலையக மக்களின் பிரதிநிதிகளுடன் நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்களது ஒத்துழைப்புக் காரணமாக அவர்கள் பலவீனமாகக் கூடாது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா உருவாக்குவதற்கு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதே காரணம். மலையகத்துக்கு வடக்குக்குமான தொடர்பு ஆழமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எந்தவிமானப் பிளவுகளும் இல்லை. ஐ.தே.க அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், ஒற்றுமையின்மை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அறிவிப்பதற்கு எடுத்துக்கொண்ட காலதாமதமே, ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் தோல்விக்கு காரணம்.
புதிய அரசமைப்பு கொண்டுவருவதில் ஏற்பட்ட தோல்விக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேனவுக்கும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவுகளே காரணம்” எனவும் ​இ​ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments