அதிகாரப் பகிர்வு, 13வது திருத்தம், ஜெனிவா தீர்மானம், எல்லாமே அவுட்!!! பனங்காட்டான்

கோதபாய அரசிடம் - இப்போதும் சரி, பொதுத் தேர்தலின் பின்னரும் சரி தமிழர்கள் கேட்பதற்கும் எதிர்பார்ப்பதற்கும் என்ன இருக்கிறது? மாநாடு
கூட்டி உரையாற்றுவதும், சூடு பறக்க அறிக்கைகள் விடுவதும், காட்டமான விளாசல்களும், இந்தியா மீதான நம்பிக்கையும் தமிழர்களின் எழுபதாண்டு கால அரசியல் அபிலாசைகளை பெற்றுத் தருமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் நம்புகிறதா? 

இலங்கை நாடாளுமன்றம் மார்ச் மாதம் 3ஆம் திகதியளவில் கலைக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறுமென்பது உறுதியாகிவிட்டது. ஜனாதிபதி கோதபாயாவே இதனை அறிவித்துள்ளார்.

மகிந்தவை தலைவராகக் கொண்ட சிறிலங்கா பொதுபலசேன (இதுதான் கோதபாயவின் கட்சியும்) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாளே பொதுத்தேர்தலைச் சந்திக்க தன்னைத் தயாராக்கி விட்டது.

மகிந்தவின் தாய்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி, யாவுமிழந்த நிலையில் நிற்கும் மைத்திரி தலைமையில் இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது. இக்கட்சியின் பிரமுகர்கள் மகிந்த அணியில் அபேட்சகராக நிற்பதற்கு பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்தளவில் அதற்குள்ளான பிளவு மேலும் அதிகரித்துச் செல்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வி அடைந்ததற்கு ரணிலின் குள்ளத்தனமே காரணமென்பதை சஜித் பிரேமதாச மறைமுகமாகவும் நேரடியாகவும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அத்தேர்தலில் சஜித் தோல்வி பெறுவாரென்பது தமக்கு முற்கூட்டியே தெரியுமென்று ரணில் தென்பகுதிக் கூட்டமொன்றில் பகிரங்கமாகக் கூறியது ஆச்சரியமான விடயமன்று.

ஜனாதிபதித் தேர்தலில் தலைகுப்புற வீழ்ந்த ஜே.வி.பி. இன்னமும் எழுந்திருக்கவில்லை. பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்கள், பணபலம், பரப்புரைக்களம் எதுவுமே இல்லாத பரிதாப நிலை இதனுடையது.

தெற்கின் நிலை இப்படியென்றால் வடகிழக்கின் நிலைமை - முக்கியமாக வடக்கின் நிலைவரமும் அதேபோன்றதுதான்.

ஐந்தாகவிருந்த கூட்டமைப்பு இப்போது இரண்டரையாகியுள்ளது. தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ.;, ஆகியவற்றைத் தொடர்ந்து ரெலோ இரண்டாகப் பிரிந்து அரைவாசி வெளியேறியுள்ளது. இந்த அரைவாசி இப்போது புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளது.

கூட்டமைப்பில் ஒருவராகி வடமாகாண முதலமைச்சரான நீதியரசர் விக்னேஸ்வரனும் புதிய கூட்டொன்றை உருவாக்கியுள்ளதால் கூட்டமைப்பு பெயரளவில் கூட்டு அமைப்பாகவிருப்பினும் யதார்த்தம் அதுவல்ல.

சிங்கள தேசத்தை வெற்றி கொள்ள வேண்டுமானால், தமிழர் தரப்பு அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தலைமையில் போட்டியிட்டு 22 ஆசனங்களையும் கைப்பற்ற வேண்டுமென்ற இறுதிக்கால ஆசையை சம்பந்தன் ஒற்றுமைக்குரலாக வெளிப்படுத்தியுள்ளார்.

1949இல் உருவான தமிழரசு (சம~;டி) 1976இல் தனியரசு கேட்கும் விடுதலைக்கூட்டணியாகி, 2001இல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகி இப்போது கூட்டுக் கலையும் அமைப்பாக மாறியுள்ளது.

தமிழருக்கான மாற்றுத் தலைமை விக்னேஸ்வரனா, கஜேந்திரகுமார் பொன்னம்பலமா என்ற அடிபாட்டுக்குள், ரெலோவிலிருந்து பிரிந்தவர்கள் தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் ஒன்றை உருவாக்கியுள்ளனர். சாத்தியப்படுமானால் இந்தப் புதிய அணி விக்னேஸ்வரன் பக்கம் செல்லலாம்.

தமிழ் தேசிய கட்சியின் தலைவரான சிறிகாந்தா அரசியலுக்குப் புதியவரல்ல. ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளராக இருந்த இவர், ஊர்காவற்றுறை எம்.பி.யாகவிருந்த வி.நவரத்தினம் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் 1969இல் சுயாட்சிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தபோது அதன் பிரதானியாக விளங்கியவர். பின்னர் ரெலோவின் ஆலோசகராக வழக்கறிஞர் சத்தியேந்திரா, கரிகாலன் ஆகியோரை அடுத்து பதவி வகித்து அக்கட்சியின் உறுப்பினரானவர்.

2001இல் கூட்டமைப்பில் ரெலோ வழியாக இணைந்து இரண்டு பொதுத்தேர்தல்களில் தோல்வி கண்ட பின்னர் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு சிறிகாந்தா நியமனமானவர். பின்னர் சிறிது காலம் ரெலோவிலிருந்து விலகி புதிய கட்சியொன்றை உருவாக்கி அதில் தோல்வி கண்ட பின்னர் மீண்டும் ரெலோவில் இணைந்தவர்.

இப்போது இரண்டாவது தடவையாக ரெலோவிலிருந்து விலகி சிவாஜிலிங்கத்தையும் இணைத்துக் கொண்டு புதிய கட்சி உருவாக்கியிருக்கிறார். இந்த முயற்சி காயா பழமா என்பது அடுத்த நான்கு மாதங்களுக்குள் தெரியவரும்.

இவையெல்லாவற்றுக்கும் முத்தாரம் வைப்பது போன்ற ஒரு அறிவிப்பு அதிரடியாக வந்தள்ளது. அடுத்த தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லையென சம்பந்தன் அறிவித்துள்ளதான செய்தியே இது.

இது உண்மையோ பொய்யோ, அவர் ஓய்வுபெறும் காலமும் நேரமும் சூழ்நிலையும் வந்துவிட்டது என்பது மட்டும் உண்மை.

1977 முதல் 1983வரை திருமலை நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த சம்பந்தன் 1997 முதல் 2000 வரை தோல்வி கண்டு வீட்டிலிருந்தபோது, 2001இல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டவேளை  அதனுடாக மீண்டும் எம்.பி.யானார். கூட்டமைப்பு உருவாகியிராவிடின் 2000ஆம் ஆண்டிலேயே அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டியவர்.

2001இலிருந்து இதுவரை கூட்டமைப்பின் தலைவராகவும், கடைசி நான்கு வருடங்கள் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து தமிழர் பிரச்சனைத் தீர்வில் உருப்படியாக எதனையுமே செய்யவில்லை. தமிழகத்தின் காமராஜர் எப்போதும் ஷஆகட்டும் பார்க்கலாம்| என்ற பாணியில் அரசியல் நடத்தியது போன்று இயங்கிய சம்பந்தன் கௌரவமாக அரசியலிலிருந்து ஓய்வு பெற வந்துள்ளாரெனின் பெரும்பாலானவர்களும் அதனை வரவேற்பர்.

ஆனால், கூட்டமைப்பின் புதிய தலைவராக யார் வருவாரென்ற கேள்விக்கான பதில் சற்று குழப்பத்தைத் தருகிறது.

ஷசுமா| என்ற செல்லப் பெயரைக் கொண்டவர் இப்பதவிக்கு வருவாரா? அடிக்கடி அறிக்கைகள் விடுவதிலும், தர்க்கரீதியாக எதிரிகளை மடக்குவதிலும் சூராதி சூரனான ஷசுமா|, தேர்தல் கனவில் இப்போது வெள்ளக் காணிகளில் வேட்டியை சண்டியன் கட்டுக்கட்டி நடந்து செல்வதையும், அடிக்கடி கட்டிடத் திறப்பு விழாக்களில் காட்சியளிப்பதையும் பார்க்கும்போது...

புதிய அரசியலமைப்பு வராவிட்டால் பதவி விலகுவேன் என்று சொல்லி விட்டு பின்னர் குத்துக்கரணமடிக்கும் ஷசுமா| பற்றி பின்னர் ஒருதடவை விரிவாகப் பார்க்கலாம்.

ஜனாதிபதியான ஒரு மாதத்துக்குள் கோதபாய விடுத்த சில அறிவிப்புகள் தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்டவையாக இருப்பதை அவதானிக்கலாம்.

இந்திப் பிரதமர் புதுடில்லியில் வைத்து நேரடியாக கோதபாயவிடம் 13வது திருத்தத்தை அமுல் செய்யுமாறு கேட்டதற்கு, பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு எதிரான எதனையும் தம்மால் செய்ய முடியாதென்று தட்டிக் கழித்துவிட்டார். பாவம் மோடி, வாய் மூடி மௌனியாகியுள்ளார்.

தமிழர்களின் இனப்பிரச்சனையைத் தீர்க்கும் பாதையாகக் கேட்கப்பட்டுவரும் அதிகாரப் பகிர்வையோ, தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான சம~;டியையோ தம்மால் வழங்க முடியாதென்றும் கோதபாய அறிவித்துவிட்டார். பெரும்பான்மை மக்கள் நிராகரிக்கின்ற ஒன்றை தம்மால் எவ்வாறு வழங்க முடியுமென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இலங்கையின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அண்மையில் சந்தித்து உரையாடியபோதே இதனை அவர் தெரிவித்தார்.

இந்த வாரத்து வியாழக்கிழமை (டிசம்பர் 19) கொழும்பில் சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்த கோதபாய இரண்டு விடயங்களை வெளிப்படுத்தினார். அதாவது ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு ஆபத்தாக அமையுமென்பதால் அதனைத் தமது அரசால் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதே இந்த அறிவிப்பு.

இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு சகல நாடுகளும் முழு ஆதரவை வழங்கியிருந்தன. இதனை நிறைவேற்றக் காரணமாகவிருந்த மைத்திரி அரசு சர்வதேச நீதிப் பொறிமுறையை மறுத்து இதனை நிறைவேற்ற காலங்கடத்தி வந்தது. இப்போது இதனை நிராகரிக்க இது கோதபாயவுக்கு வாய்ப்பாகிப் போய்விட்டது.

காணாமல் போனோர் விவகாரம் பற்றிக் குறிப்பிட்ட கோதபாய, யுத்தத்தின்போது இரண்டு தரப்புகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே அவர்களை உயிர் நீத்தவர்களாகவே கருத வேண்டியுள்ளது. ஆதலால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் முடிந்துபோன விடயம் என வெகு சிம்பிளாக அறிவித்துள்ளார்.

நாடுகள் நாடுகள் பக்கம்தான் எப்போதும் நிற்கும் என்பது அரசியல் சித்தாந்தம் என்பதால் கோதபாய எடுக்கும் எந்தவொரு முடிவும் அவருக்கு சாதகமாக அமைந்தால் வியப்படைய நேராது.

13வது திருத்தம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதிகாரப் பகிர்வுக்கு மறுப்பு. சம~;டி கிடையாதென்றாயிற்று. ஜெனிவா தீர்மானம் ஏற்க முடியாதாம். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் முடிந்த விடயமென்றும் சொல்லியாயிற்று.

இனி, கோதபாய அரசிடம் - இப்போதும் சரி, பொதுத் தேர்தலின் பின்னரும் சரி தமிழர்கள் கேட்பதற்கும் எதிர்பார்ப்பதற்கும் என்ன இருக்கிறது?

மாநாடு கூட்டி உரையாற்றுவதும், சூடு பறக்க அறிக்கைகள் விடுவதும், காட்டமான விளாசல்களும், இந்தியா மீதான நம்பிக்கையும் தமிழர்களின் எழுபதாண்டு கால அரசியல் அபிலாசைகளை பெற்றுத் தருமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் நம்புகிறதா?

No comments