மாவீரர் நாள் - பிரித்தானியா எக்ஸல் மண்டபம்

கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள்
விதைத்த கல்லறை மேல் மீண்டும் ஒரு முறை சத்தியம் செய்து வல்லமை தாருங்கள் என வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள்.

வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால்
எக்ஸல் மண்டபத்தில் 2019ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர்
நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்படுகின்றது.

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை புலம் பெயர் நாடுகளில் தாயகம் நோக்கிய பணிகளில் நீண்ட காலமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு மார்க்கண்டு இரவிசங்கர் அவர்கள் ஏற்றி வைத்தார். பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பைச் சார்ந்த செல்வி அஸ்வினி ஆனந்த் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை 1995ம் ஆண்டு யாழ்க் கோட்டையில் சிறிலங்கா படையினருடன் மோதலின் போது வீரச்சாவெய்திய கீர்த்தியின் சகோரனும் தேசியத்தலைவரின் பாரட்டினைப் பெற்ற மருத்துவப் போராளியும் 2009 இறுதியுத்தம் வரை பல நூறு போராளிகளுக்கு களத்தில் நின்று மருத்துவப் பணியைப் புரிந்தவருமான Philip Johnson அவர்கள் ஏற்றி வைத்தார்.

செங்களமாடி ஈழமண்ணை முத்த மிட்ட வரை அகத்தில் இருத்தி 2019ஆம் ஆண்டிற்கான தமிழீழ தேசிய மாவீரர் நாளினை வழமைபோல் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் நினைவு கூறப்படுகின்றது.

தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரிக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த நம் மாவீரச்செல்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலித்த சம நேரத்தில் ஈகைச்சுடரினை மாவீரர்களை நினைவில் நிறுத்தி உன்னதமான ஈகை சுடரினை தமிழீழ விடுதலை புலிகளின் இம்ரான் பாண்டியன் படையின் தளபதி மணியரசன் அவர்களின் துணைவியும் சிறுத்தை படையினரின் மகளீர் சிறப்பு அணி தளபதியுமான திருமதி மணியரசன் அரபி அவர்கள் ஏற்றி வைத்தார். ஏற்றியதைத் தொடர்ந்து கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் எம் மாவீரச்செல்வங்களுக்காக சுடரேற்ற எக்ஸல் மண்டபம் கண்ணீரில் மூழ்க எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து எம் மாவீரச்செம்மல்களின் வீரதீர தியாக நினைவுகளோடு அவர்களுடைய திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்கள் தாங்கி கனத்த மனதோடு வணக்கம் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

No comments