தூக்கிய வீசப்படுகின்றார் நெடுந்தீவு பிரதேசசபை தலைவர்?



கட்சிகளை உடைப்பதும், சிதைப்பதுமே பெரமுனவின் கைங்கரியம். அவர்களின் சூழ்ச்சி வலையில் நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் சிக்கியுள்ளார். உடனடியாக அவரை கட்சியிலிருந்தும், தவிசாளர் பதவியிலிருந்தும் நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன என தெரிவித்துள்ளார் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணம்.

ரெலோவை சேர்ந்த நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளரான ரொஷான் இன்று கட்சி தாவி, கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளார். பிரதேச மக்கள் இந்த தீர்மானத்தால் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ள நிலையில், ரெலோ கட்சியின் நிலைப்பாடு தொடர்பில், அந்த கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணத்தை தொடர்பு கொண்டு கேட்டோம்.

“முன்னாள் போராளியான அவர், புனர்வாழ்வின் பின்னர் பிரதேசத்தில் அரசியலில் ஈடுபடும் ஆர்வத்துடன் இருந்தார். எமது கட்சியுடன் இணைய விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து உறுப்பினராக்கப்பட்டார். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

நெடுந்தீவில் த.தே.கூ 4, ஐ.தே.க 1, சுயேட்சை 2 உறுப்பினர்களுடன் ஆட்சியிலிருந்தது. ஈ.பி.டி.பி 6 உறுப்பினர்களுடன் இருந்தது. உப தவிசாளர் மரணமானதை தொடர்ந்து, அதற்கான தெரிவை மேற்கொள்ள மாகாண உள்ளூராட்சிசபை ஊடாக முயற்சித்தபோதும், எதிர்க்கட்சிகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அது தொங்குசபையாகவே இயங்கியது.



இலங்கையிலுள்ள சபைகளில் வருமானம் குறைந்தசபை நெடுந்தீவுதான். அதனால் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சபையில் நிதியில்லாவிட்டாலும், சிறிதரன் எம்.பியின் கம்பெரலிய நிதியின் ஊடாக பல வீதிகளை அமைத்து கொடுத்துள்ளார்.

மாதாந்த அமர்வுகள் குழப்பங்களுடன், கொடுப்பனவுகளை அங்கீகரிப்பதாகத்தான் நடந்தன.

பொதுஜன பெரமுனவினர் கட்சிகளை உடைப்பதும், சிதைப்பதும், தமிழர் வாக்குகளை பேரம்பேசுபவர்கள். தமிழர்களின் வாக்குகளை உடைப்பது அவர்களின் கைவந்த கலை. பணத்தை கொடுத்து, பேரம் பேசி பலரை உடைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் வலையில் இவர் விழுந்துள்ளார்.

அவரை கட்சியிலிருந்தும், தவிசாளர் பதவியிலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

No comments