சிவாஜிக்கு ஏதோ நோய் - சேனாதி காட்டம்

ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு அணியாக பிரிந்து செயற்பட்டு தேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்பட்டார். அதேபோல இப்பொழுதும் ஒரு அணி பகிஷ்கரிப்பு என புறப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். முத்திரைச்சந்தி, சங்கிலியன் பூங்காவில் இன்று (புதன்கிழமை) சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2010ஆம் ஆண்டும் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். இப்பொழுதும் போட்டியிடுகிறார். போட்டியிடாவிட்டால் உயிரை விட்டு விடுவார். அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
அதற்கு மருந்தில்லா விட்டாலும், பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள்தான். அவர் பெரியளவில் வாக்கெடுக்கா விட்டாலும், எங்களிற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.
இப்பொழுதும் ஒரு தரப்பினர் பகிஷ்கரிப்போம் என்கிறார்கள். 2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க சமஷ்டி முறையில் அதிகாரத்தை தருவதாக கூறினார். ஆனால் தோற்கடிக்கப்பட்டார். அதே போன்று இப்பொழுதும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் சஜித்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை. எந்த உடன்பாடும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ராஜித, ரணிலுடன் சம்பந்தனும், சுமந்திரனும் பேசினார்கள். சஜித்தும் எதுவும் பேசவில்லை. ஆனால் பொருத்தமான நேரத்தில் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு யாருக்கு வாக்களிக்கலாம். சஜித்திற்குத்தான் வாக்களிக்கலாம்” என்றார்.

No comments