ஐந்து கூட்டும் போ! பதின்மூன்றும் போ! ஒன்றுமில்லா சஜித்தே சரணம் ஐயா! -பனங்காட்டான்

ஐந்து கட்சிக் கூட்டு போனாலென்ன, 13 அம்சச் கோரிக்கை போனாலென்ன, கூட்டமைப்புதான் உடைந்தாலென்ன, தமிழரசுக் கட்சியே தலைமைக் கட்சியென்று மமதையில் இருக்கும் இதன் தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான எச்சரிக்கையை ஏனோதானோவென்று புறந்தள்ளினால் அதற்கான அறுவடையும்  அவர்களுக்கே. 

இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிப்பதற்கு முன்னர் கடந்த இரண்டு வாரங்களாக என்னால் இத்தொடரில் எழுதப்பட்டவைகளின் சில பந்திகளை முதலில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

அக்டோபர் மாத கடைசி வாரத்தில் எழுதப்பட்ட கட்டுரைக்கு, சஜித்தை கூட்டமைப்பு ஆதரிப்பதற்கு 13 அம்ச ஆவணம் தடையாக இருக்காதென்று தலைப்பிட்டிருந்தேன்.

இதில் இறுதியாக பின்வருமாறு கூறியிருந்தேன். '13 அம்சத் திட்டத்தை சஜித் நிராகரித்தாலும், ரணில் உடன்பட்டதாக அறிவிக்காவிட்டாலும், 3 கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பு தனது ஆதரவை சஜித்துக்கே வழங்குமென்பது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு.

வழக்கம்போல கொஞ்சம் இழுத்தடித்த பின்னரே கூட்டமைப்பு சரியான விளக்கங்களோடு அறிவிக்கும். அதற்கான அறிக்கையை சுமந்திரன் ஆரம்பித்துவிட்டாரென்பது ரகசியமன்று" என்று அதன் கடைசிப் பந்தியில் குறிப்பிட்டிருந்தேன்.

கடந்த வாரத்து கட்டுரையின் முக்கியமான பந்தியாக, சஜித்தின் தேர்தல் அறிக்கைக்கு காத்திருந்தவர்களுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது எனச் சுட்டியிருந்தேன்.

மேற்குறிப்பிட்ட இரண்டு வாரக் கட்டுரைகளின் சாராம்சமாக, கூட்டமைப்பு நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கும், அதற்கான காரணங்களை நம்பும்படியாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஓர் அறிக்கையாக எழுதி வெளியிடுவார் என்பதாக அமைந்திருந்தது.

நூற்றுக்கு நூற்றைம்பது வீதமாக அதுவே அட்சரம் பிசகாது இப்போது நடந்துள்ளது.

கூட்டமைப்பின் சஜித் ஆதரவு முடிவு கோதபாய தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை. மாறாக, இதனை எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு பல இறுதிக் கட்ட வேட்டுகளைத் தீர்ப்பதற்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

சஜித் - கூட்டமைப்பு ரகசியம் என்ன? இருதரப்பும் இதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்த சஜித் ஒப்புக்கொண்டுள்ளார் என்று இனவாதம் கக்கும் கோசங்களை மகிந்த அணி கிளப்ப ஆரம்பித்துள்ளது.

மறுபக்கத்தில், தாம் யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை, சம~;டிக் கோரிக்கைக்கு ஒருபோதும் நான் இணங்கவில்லை, நாடு பிளவுபட அனுமதியேன் என்று சஜித் ஒவ்வொரு மேடைகளிலும் உறுதி கூறும் நிலையை மகிந்த அணி ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பு சஜித்துக்கு வழங்க முன்வந்திருக்கும் ஆதரவை முன்னிறுத்தி, சிங்கள மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதே மகிந்தவின் இலக்கு. தெற்கில் என்னதான் கூச்சலிட்டாலும்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள், நாடு தழுவிய முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழர் எனக்கூறப்படும் சிறுபான்மையினத்தவரின் வாக்குகளே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப் போகிறது.

இதனால்தான் மகிந்தவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச கடந்த ஒரு வாரமாக வடக்கில் கூடாரமடித்து, மடித்துக் கட்டிய சாரத்துடன் சந்திகளிலும் சந்தைகளிலும் மக்களோடு தோழன்புடன் வீதியுலா வருகிறார்.

இது கோதபாயவின் வெற்றிக்கான வாக்குவேட்டை மட்டுமல்ல. அடுத்த வருட பொதுத்தேர்தலில் தம்மை பிரதமராக்குவதற்கான ரகசிய முயற்சியும்கூட.

தெற்கில் தேர்தல் களத்தை ஒருபுறத்தே விட்டு, தமிழர் பகுதிகளில் உருவாகியிருக்கும் புதிய அரசியல் களத்தை சற்று உற்று நோக்க வேண்டியுள்ளது.

உண்மையைச் சொல்வதானால் வடக்கின் தமிழ் கட்சிகளை அல்லது தமிழர் தலைமை அமைப்புகளை மிக மோசமான பிளவுக்குள் ஜனாதிபதித் தேர்தல் தள்ளி விட்டதென்றே சொல்ல வேண்டும்.

மூன்று கட்சிகளை உள்ளடக்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்கி வருகிறது. சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவையும், சுரே~; பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ் உம் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனி வழியில் சென்று கொண்டிருக்கிறது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை இணைத்து ஒரு முன்முயற்சியில் கடந்த மாதம் இறங்கியது. மேற்குறிப்பிட்ட அனைத்தையும் (எல்லாமாக ஆறு கட்சிகள்) இணைத்து ஜனாதிபதித் தேர்தலுக்காக 13 அம்ச ஆவணம் ஒன்றைத் தயாரித்தது. அதனை முன்வைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சு நடத்த வேண்டுமென்பது இதன் நோக்கம். ஆரம்பத்திலேயே கஜேந்திரகுமார் அணி வெளியேறிவிட்டது.

மிகுதி ஐந்து கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டனவாயினும், எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை, பேச்சுக்கும் மறுத்துவிட்டன.

ஆனால், இவ்விடயம் அரசியல் அரங்கில் நல்லதொரு பேசுபொருளாகவும் ஊடகங்களுக்கான மலிவுத் தீனியாகவும் அமைந்திருந்தது. 13 அம்சக் கோரிக்கையை முன்வைத்து ஐந்து கட்சிகளுடனும் பேச்சு நடத்தினாலே சிங்கள மக்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தால் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் போட்டி அடிப்படையில் இதனை நிராகரித்தனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் அதன் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் முதலாவது கல்லை வீசினார். தமிழர்களுடன் பேச்சு நடத்த எந்தவொரு வேட்பாளரும் தயாரில்லையென்பதால் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை தமிழ் மக்கள் தாமாகவே தீர்மானிக்கலாம் என்பது இவரது கருத்தாக அமைந்தது.

சகல வேட்பாளர்களின் அறிக்கைகளும் வந்த பின்னரே யாருக்கு ஆதரவளிப்பதை முடிவெடுக்கலாமென கூட்டமைப்பு அறிவித்து வந்தது. அதேசமயம், பிரதான வேட்பாளர்களான சஜித்தையும் கோதபாயவையும் நம்ப முடியாதெனவும், இருவருமே ஏமாற்றுப் பேர்வழிகளெனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஊடகங்க;டாக தெரிவித்தார்.

இறுதியாக, சஜித்தின் அறிக்கை வெளியானது. வழமையான ஒற்றையாட்சி, பிளவுபடாத நாடு, அதிகாரப் பகிர்வு என்று பொதுப்படை வார்த்தைகளால் இது விளையாடியது.
சஜித்துக்கு வாக்களிக்க ஏற்கனவே முடிவெடுத்திருந்த தமிழரசுக்கட்சிக்கு இந்த அறிக்கை நேசக்கரம் நீட்டியது. வவுனியாவில் கூடிய இக்கட்சியினர் தனித்து சஜித்தை ஆதரிக்க முடிவெடுத்தனர். தனித்தவில் வாசிக்கும் புளொட் தலைவர் உடனடியாக அதனை ஏற்றுக் கொண்டார்.


கூட்டமைப்பின் மூன்றாம் கட்சியான ரெலோவுக்கு உட்கட்சி மோதல் ஏற்பட்டது. ஆனாலும், பதவி மோகம் கொண்ட செல்வம் அடைக்கலநாதன் தமிழரசின் முடிவுக்குச் சாதகமாக முடிவெடுத்தார். அதேசமயம், தமிழரசுகட்சி ரெலோவுக்குள் ஊடுருவி சில பிளவுகளை உண்டுபண்ணியது.

வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் ரெலோவிலிருந்து தமிழரசுக்குப் பாய்ந்துவிட்டாரெனத் தகவல். அம்பாறை மாவட்ட ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் தமிழரசுக்குப் பாய்ந்துவிட்டார். இதனால் ரெலோ கொதிநிலையில் உள்ளது.

இப்படியான புதிய நெருக்கடிகளை ஜனாதிபதித் தேர்தல் தமிழர் தரப்பில் ஏற்படுத்தியுள்ளது. இவ்வேளையில் ஐந்து கட்சிகளை இணைத்து, 13 அம்ச கோரிக்கையை தயாரித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் காட்டமான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மாணவ சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக தமிழ் சமூகத்தையும் ஐந்து தமிழ் கட்சிகளும் ஏமாற்றி முட்டாள்களாக்கி விட்டன என்று இவர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த அறிக்கையின் இறுதிப் பகுதி ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியது. தம்மி~;டப்படி சஜித் தரப்புக்கு ஆதரவளிக்க முன்வந்தவர்கள் அடுத்துவரும் மாதங்களில் 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவர் என்று இந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை வெறுமனே ஒரு பேச்சுக்கான ஒன்றாக தமிழ் தலைமைகள் எடுப்பார்களாயின் அதன் பலாபலனை அவர்கள் நிச்சயம் அனுபவித்தே தீருவர்.

மறுபக்கத்தில், கூட்டமைப்பின் தலைவர், தமிழரசு தலைவர், புளொட் தலைவர், ரெலோ தலைவர் ஆகிய நால்வரின் பெயர்களும் பொறித்து சஜித்துக்கு ஆதரவு வழங்கும் அறிக்கையை சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.

கோதபாய மற்றும் சஜித் ஆகியோரின் தேர்தல் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டவைகளை பார்க்கையில் சஜித்தின் பக்கத்தில் நம்பிக்கை இருப்பதாகவும், அதில் கூறப்பட்டவைகளை சஜித் தரப்பு செய்யுமென நம்புவதாலும் இந்த முடிவை தாம் எடுத்ததாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னைய காலங்களிலும் ரணில் மீது நம்பிக்கை கொண்டு தைப்பொங்கல், புதுவருடம், நத்தார் கொண்டாட்டம் ஆகிய வேளைகளில் தமிழ் மக்களுக்கு தீர்வு வருமென வாழ்த்துக் கூறிய சம்பந்தன் இப்போது சஜித்தின் மீது நம்பிக்கை கொண்டு அறிக்கை விட்டுள்ளார்.

சுமந்திரன் இது தொடர்பாக விடுத்த அறிக்கையில் சஜித் மீது நம்பிக்கை தெரிவிக்காது, கோதபாய தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதற்காகவே சஜித்தை ஆதரிப்பதாகக் கூறியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது.

ஐந்து கட்சிக் கூட்டு போனாலென்ன, 13 அம்சச் கோரிக்கை போனாலென்ன, கூட்டமைப்புதான் உடைந்தாலென்ன, தமிழரசுக் கட்சியே தலைமைக் கட்சியென்று மமதையில் இருக்கும் இதன் தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான எச்சரிக்கையை ஏனோதானோவென்று புறந்தள்ளினால் அதற்கான அறுவடையும்  அவர்களுக்கே.

No comments