தொடர்கிறது ஊடகவியலாளர்களது போராட்டம்!


தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி தமிழ் ஊடகவியலாளர்களினால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நேற்று புதன்கிழமை கிளிநொச்சி, வவுனியா. மன்னார் ஆகிய பிரதேசங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் போராட்டம் இடம்பெற்றது. யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து இன்று வரை நீதியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தினர். கடந்த முப்பது வருடங்களாக தமிழ் ஊடகத்துறை பல்வேறு அச்சுறுத்தல்களையும் நெருக்குவாரங்களையும் எதிர்கொண்டு வருகின்றது.


ஆனால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் பலருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். 
இந்தப் போராட்டம் சென்ற சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள், பொலிஸாரின் விசாரணைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள், இலங்கைப் பொலிஸாரின் விசாரணைகள் எதுவுமே நடத்தப்படுவதில்லை.

தமிழ் ஊடகத்துறையின் அச்சமான நிலைமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த ஊடகவியலாளர்கள், பதவிக்கு வரும் சிங்கள ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்றும் குற்றம் சுமத்தினர்.
இதனிடையே தமது நினைவேந்தல் மாத இறுதி நிகழ்வை மக்களிடையே பெருமெடுப்பில் அணிதிரட்டி செய்யவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

No comments