முதலாவது கடத்தல்! சிக்கலில் மாட்டியது இலங்கை அரசு

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு தடுத்து வைத்து அச்சுறுத்தப்பட்டார் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்துள்ள சுவிஸ் தூதரகம் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிர்ரே அலையன் எல்ஸசிங்கெர் இந்த வலியுறுத்தலினை முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை பெண் அதிகாரி ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு கடத்தப்பட்ட அவரிடம் பல்வேறு விடயங்கள் குறித்து கடத்தல்காரர்கள் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு சுவிசுக்கு தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வு (சிஐடி) பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா குறித்தே தூதரக அதிகாரியிடம் இவ்வாறு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இறுதியில் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தி, அவரை விடுதலை செய்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

No comments