புறப்பட்டன வாக்குப்பெட்டிகள்:சமூக ஊடகங்களிற்கு கட்டுப்பாடு!


நாளைய தேர்தலிற்காக இலங்கை தயாராகிவருகின்றது.குறிப்பாக வாக்குப்பெட்டிகள் அனைத்து வாக்களிப்பு நிலையத்திற்கும் தற்போது எடுத்துச்செல்லப்பட்டுவருகின்றது. யாழ்.மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதனிடையே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது, தேர்தல் சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உண்மைக்குப் புறம்பான மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் மற்றும் வேட்பாளர்களுக்கு சார்பாக கருத்துகள், விளம்பரங்கள் இடம்பெறுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரினால் வெளியிடப்படுவதாக கூறப்பட்டு முன்னதாக வெளியிடப்பட்ட உண்மைக்குப் புறம்பான தகவல்கள், மீளவும் வெளியாகின்ற நிலை அவதானிக்கப்பட்டது.

அவை குறித்து பேஸ்புக் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்;ந்து நீடித்தால், சமூக ஊடகங்களை தடை செய்யும் நிலைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என சமூக ஊடக பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சமூக ஊடகங்களை அவதானமாக பயன்படுத்த வேண்டும்.

மௌன காலப்பகுதியில், வேட்பாளரையோ அல்லது அரசியல் கட்சியையோ ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments