திருக்கேதிஸ்வர வளைவு விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு

திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
திருக்கேதீஸ்வர ஆலய வளைவு அண்மையில் ஒரு சமய தரப்பினரால் இடித்து வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, அதனை செய்தவர்கள் மற்றும் அங்கு நந்திக் கொடியை மிதித்ததாக கூறப்பட்டவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை அனுமதியில்லாமல் நுழைவாயில் வளைவை கட்டினார்கள் என திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகக் குழுவினருக்கு எதிராக இன்னுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளும் நேற்று (திங்கட்கிழமை) நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எச்.எம்.அப்துல்லா முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.
இதன்போது சட்டத்தரணி சுமந்திரன் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையின் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணனின் பெயர் இணைக்கப்பட்டிருக்கும் விதத்தை ஆட்சேபித்து வாதாடினார்.
அதன்பின்னர் வழக்கு விசாரனை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  எம்.ஏ.சுமந்திரன், பொலிஸார் இன்னும் விசாரணைகளை முடிக்கவில்லை என்ற காரணத்தினாலும் தேர்தல் சம்பந்தமாக விசேட சேவைக்கு சென்றிருப்பதாக கூறியதாலும் குறித்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக மீண்டும் இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments