கிளி வாள்வெட்டில் நால்வர் காயம்

கிளிநொச்சி- தட்டுவன்கொட்டி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பகுதியிலுள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிராம சேவையாளர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பாக தொடர்ச்சியாக மேற்கொண்ட தடுக்கும் நடவடிக்கையின் உச்ச கட்டத்திலேயே இவ்வாறு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “நேற்று பிற்பகல் 11 மணியளவில், தட்டுவன்கொட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுமார் ஏழுபேர் கொண்ட குழுவினர் நடமாடியதாகவும் சிறிது நேரத்தின் பின்னர் அவர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது வாள்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது  கிராம சேவையாளரின் இரு சகோதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் மற்றும் ஏனைய உறவினர் ஒருவரும்  இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த வீட்டை இலக்கு வைத்து கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதமும், குறித்த கிராம சேவையாளரை தாக்கியமை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை)  இரவு குறித்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
இதேவேளை  நேர்மையான முறையில் தமது கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகளிற்கு பாதுகாப்பற்ற நிலை தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் அதேவேளை, சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முற்படும் சமூக ஆர்வலர்கள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும்  வகையில் பொலிஸார் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென  பத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

No comments