காணாமல் ஆக்கப்பட்டோருக்காக 10 இலட்சம் பெற்றுத் தருவாராம் வரதர்

காணாமல் போனவர்களுக்கு சில குறிப்பிட்ட நாடுகள் கொடுத்த 5000 ஆயிரம் மில்லியன் ரூபாய்யை, பகிர்ந்தளிக்கும் வகையில் தலா ஒரு குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடை வழங்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்துவோம் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி செயலாலர் நாயகமும் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சருமான வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு எங்களுடைய கட்சி ஆகிய தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆதரிக்கின்றது. இன்றைக்கு எல்லோராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்ற விடயம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து 65 சதவீத வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதியாக அவர் வருவார் என பல கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அதேபோல மலையக மக்கள் மத்தியில் இருந்து 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளையும் பெறுவார்.

முஸ்லீம் மக்களிடம் இருந்து மிக கனிசமான அளவு வாக்குகளை பெறுவார் என்பதுடன் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களும் இன்றைய காலத்தின் தேவையையும் அரசியல் ரீதியாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படுகின்ற மாற்றங்களையும் கருத்தில் எடுத்து மிகப் பெருமளவில் தாமரை மொட்டுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

காணாமல் போனவர்களுக்கு சில குறிப்பிட்ட நாடுகள் 5000 ஆயிரம் மில்லியன் ரூபாய் வழங்கியிருக்கின்றது. ஆனால் அந்த பணம் உரியவர்களுக்கு கொடுக்கப்படாமல் அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாதந்தம் பல மில்லியன் ரூபாய்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறே பிரச்சாரத்துக்காக பல மில்லியன் ரூபாய் எடுக்கப்பட்டிருக்கின்றது
இப்போது ஒரு மாதம்தான் 6 ஆயிரம் ரூபாய் காணாமல் போன குடும்பங்களுக்கு கொடுப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால் 5 ஆயிரம் மில்லியன் ரூபாவிலிருந்து பார்க்கிறபோது சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய்களை கொடுக்கக்கூடிய ஒரு நிலைமை உள்ளது.

எனவே புதிய ஆட்சி வருகிற போது அந்தளவுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம். அது தொடர்பாக கரிசனையோடு புதிய அரசாங்கம் இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்
இராணுவ முகாம்கள் தேசிய பாதுகாப்பு என்று செல்லப்பட்டாலும்; அவற்றிற்கு அவசியமில்லாத முகாம்கள் இல்லாமல் செய்யப்படும். அந்த இராணுவ முகாங்களுக்காக தமிழ் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள் எல்லாம் திரும்பி கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அரசியல் கைதிகளை விடுவிப்தாக கூறியுள்ளனர். அதுபற்றிய பேச்சு வார்த்தைகளும் நடந்து இருக்கின்றன இவ்வாறான தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு மிக விரைவிலேயே தீர்வுகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சஜித் பிரேமதாச அமைச்சுக்கு கீழேதான் தொல்பொருள் திணைக்களம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் முல்லைத்தீவு நீராவியடி திருகோணமலை கன்னியா பிரச்சினை ஆகியவை சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினைகளில் சிங்கள பௌத்த தேசியவாதம் எவ்வளவு தூரம் தலைதூக்கி ஆடி இருக்கின்றது அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சஜித் பிரேமதாச இந்த நாட்டில் இன ஒற்றுமையை கொண்டு வரப் போகிறார் என்று சொல்வதில் மிகவும் பொய்யான வாக்குறுதிகள் உள்ளது என்பதை நாங்கள் பார்க்க முடிகின்றது.

முஸ்லீம்களை பொறுத்தவரை அவர்கள் நிச்சயமாக ஒரு கட்சிக்கு சார்பாக போகமாட்டார்கள் அவருடைய 50 வீதம் இந்தப்பக்கம் 50 வீதம் அந்தப்பக்கம் போட்டு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தங்களுடைய அரசியல் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். அதே புத்தி சாதுர்யத்துடன் தமிழ் மக்களும் செயல்பட வேண்டிய ஒரு தேவை அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதாக இன்றைக்கு இருக்கின்றது

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19ஆவது அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது எனவே பிரதமரிடம் கணிசமான அதிகாரங்களை புகை மாற்றப்படுகின்றன எனவே அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் ஒரு முழுமையான அரசாங்கம் இந்த நாட்டு அமைய இருக்கின்றது. அவர்கள் சில சில விடயங்களை தாங்களாகவே கூறுகிறார்கள் பொலிஸ் அதிகாரங்களை படிப்படியாக கொடுப்போம். அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் காணாமல் போனவர்களை மிகப்பெரிய அளவிலே நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறுகிறார்கள் நம்ப வேண்டியதாக இருக்கிறது’ என கூறினார்.

No comments