இராணுவத்தை விடுதலை செய்யும் நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்

குற்றமிழைக்காமல் சிறைக்குச் சென்ற இராணுவத்தினரை விடுவிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது,  “ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக மக்கள் சிந்தித்தே செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களைப் பொறுத்தமட்டில், இந்த நாட்டுக்கு எவரால் குறைவான அநியாயங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை சிந்தித்தே செயற்படவேண்டும்.

தற்போது கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. தான் ஜனாதிபதியானால், இராணுவத்தினரை விடுவிப்பதாக அவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், எம் அனைவருக்கும் இராணுவம் மீது மிகுந்த மரியாதைக் காணப்படுகிறது. எம்மைப் பொறுத்தவரை இராணுவத்தினர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் நாமும் இருக்கிறோம்.

இதனை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்றில்லை. இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கூட இதனை மேற்கொள்ளலாம்.

எவ்வாறாயினும், வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் வெளிவந்தபிறகே நாம் இறுதி முடிவை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments