சுமந்திரன் தனி ஓட்டம்:அனைவருக்கும் அல்வா?


தமிழ் தரப்புக்கள் பொதுக்கோரிக்கையென பல்கலைக்கழக வாசலில் பேசிக்கொண்டிருக்க தமிழரசோ தனித்து ஓட்டத்தை தொடங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் போது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோத்தாபய ராஜபக்சவிடம் கோரப்பட்டிருந்தது.

எனினும், இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விடத் தெற்கிலுள்ள மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வட- கிழக்கிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் தெற்கிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒத்தவை தான் எனவும் மகிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் தெரிவித்துள்ளனர்.

பேச்சுக்களின் முடிவில் தமது எதிர்கால அரசாங்கத்தில் வடக்கு,கிழக்கிலுள்ள தமிழர்களுக்குத் தீர்வுகளை வழங்க முடியுமென நம்புவதாக மகிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் கூறியுள்ளனர்.

மேற்படி பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் முன்வைத்த சுமந்திரன் குறித்த பேச்சுக்கள் தொடர்பாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ராஜபக்சவினரிடமிருந்து தமிழ்மக்களால் ஒருபோதும் தமது உரிமைகளை வெல்லவோ அல்லது எந்த நிவாரணத்தையோ பெறவே முடியாதென இரா. சம்பந்தன் கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒருபுறம் பல்கலைக்கழக மாணவர்களை முன்னிறுத்தி நகர்வுகளை மேற்கொண்டுள்ள சுமந்திரன் கும்பல் தனித்து முன்னதாகவே கோத்தாவுடன் பேசிய விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது

No comments